கரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் மக்கள் பலர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். அதனால் அரசு, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அரசியல் கட்சியினர், தன்னார்வலர்கள் என பலரும் நிவாரண உதவிகள் வழங்கி வருகின்றனர்.
அதுபோல திருச்சி கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், தொடர்ந்து நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார். அந்த வகையில், இன்று திருச்சி மரக்கடை பகுதியில் உள்ள பழைய பாஸ்போர்ட் அலுவலக வளாகத்தில் பாலக்கரை பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நிவாரண தொகுப்பை வழங்கினார்.
இதையொட்டி ஆட்டோ ஓட்டுநர்கள் அனைவரும் தங்களது ஆட்டோக்களுடன் வந்தால்தான் நிவாரணம் வழங்கப்படும் என்று அமைச்சர் கூறியதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களது ஆட்டோக்களுடன் நிவாரணம் வாங்க வந்திருந்தனர்.
மேலும் நிவாரணம் வழங்கும் பகுதியில் ஆட்டோக்களை நிறுத்தி நடுவில் தகுந்த இடைவெளி உடன் ஆட்டோ ஓட்டுநர்களை உட்கார வைத்து, நிவாரணத்தை அமைச்சர் வழங்கினார். தொடர்ந்து ஆட்டோக்கள் இயங்க எரிபொருள் நிதியுதவியும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஆட்டோக்கள் உடன் நிவாரணம் வாங்க வந்த ஓட்டுநர்களை நிவாரண பொருளுடன் சுற்றிசுற்றி அமைச்சரின் ஆதரவாளர்கள் வீடியோ, புகைப்படம் எடுத்ததால் ஓட்டுநர்கள் அதிருப்தி அடைந்தனர்.
இதையும் படிங்க: நாட்டு வெடிகுண்டை கடித்த பசுவிற்கு காயம்!