குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து திமுக சார்பில் இன்று திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.என். நேரு உள்ளிட்ட திமுக எம்எல்ஏ-க்கள் கலந்துகொண்டனர்.
அப்போது நேரு பேசுகையில், ''ஈழ தமிழர்களுக்கு கருணாநிதி துரோகம் செய்துவிட்டதாக கூறி அதிமுகவினர் ஆட்சியைப் பிடித்தார்கள். அவ்வாறு ஆட்சியைப் பிடித்தவர்கள் தற்போது ஈழ தமிழர்களுக்கு எதிரான ஒரு சட்டத்திற்கு ஆதரவளித்துள்ளனர். பாமக நிறுவனர் ராமதாஸ் கூட்டணி தர்மத்திற்காக ஆதரவு அளித்ததாக தெரிவித்துள்ளார். அதிமுக, பாமக ஆகியோர் ஆதரவு அளிக்காமல் இருந்திருந்தால், இந்த சட்டத்திருத்த மசோதா தோல்வி அடைந்திருக்கும். ஈழ தமிழர்களை வைத்து கட்சி நடத்துபவர்கள் இவ்வாறு செயல்பட்டுள்ளனர். அதேபோல் ஈழ தமிழர்களுக்காக கட்சி நடத்துவதாக கூறுபவர்களும் இதுகுறித்து கருத்து தெரிவிக்காமல் உள்ளனர்.
எட்டு ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில், வேட்புமனு தாக்கல் முடிந்தது பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்த சமயத்திலும் ஈழ தமிழர்களுக்கான ஆர்ப்பாட்டத்தை நடத்துமாறு திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலில் கடந்த தேர்தலின்போது செயல்பட்டது போல் இல்லாமல் அரசு அலுவலர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். நாங்கள் எந்த சலுகையையும் எதிர்பார்க்கவில்லை. நாங்கள் பெறும் வெற்றியை உறுதி செய்ய வேண்டும் என்றுதான் அரசு அலுவலர்களை கேட்டுக்கொள்கிறோம்.
அதிமுகவினர் வாக்குக்கு 200 ரூபாயும், பிரியாணியும் வழங்கத் தொடங்கிவிட்டார்கள். அதையும் மீறி திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு நேற்று அதிகளவில் கூட்டம் கூடியது. மக்கள் அளிக்கும் தீர்ப்பை நாங்கள் ஏற்கத் தயாராக இருக்கிறோம். திருச்சி மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி முழுமையான வெற்றி பெறும்.
மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து அஸ்ஸாம், டெல்லி பற்றி எரிகிறது. நாட்டில் பிரிவினைவாதத்தை காங்கிரஸ் கட்சி தூண்டி விடுவதாக பிரதமர் கூறியுள்ளார். இலங்கைத் தமிழர்கள், சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்றுதான் நாங்கள் வலியுறுத்துகிறோம். அதனால் மத்திய அரசு மக்களின் மனநிலையை புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்'' என்றார்.
இதையும் படிங்க: தமிழர்கள் நெஞ்சில் எரியும் தீயில் மத்திய அரசு பெட்ரோல் ஊற்றுகிறது - வைகோ!