தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்றுவருகிறது. முதல்கட்டமாக அஞ்சல் வாக்குகள் எண்ணப்பட்டன. தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்றுவருகிறது.
இதில் திருச்சி மாவட்டத்தில் உள்ள திருச்சி கிழக்கு, மேற்கு, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர், மண்ணச்சநல்லூர், லால்குடி, துறையூர், முசிறி, மணப்பாறை ஆகிய ஒன்பது சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலை வகிக்கின்றனர்.
திருச்சி கோட்டை
திருச்சி கிழக்குத் தொகுதியில் திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ், திருச்சி மேற்குத் தொகுதியில் கே.என். நேரு, திருவெறும்பூர் தொகுதியில் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மண்ணச்சநல்லூரில் திமுக வேட்பாளர் கதிரவன், முசிறி தொகுதியில் திமுக வேட்பாளர் காடுவெட்டி தியாகராஜன், துறையூர் தொகுதியில் திமுக வேட்பாளர் ஸ்டாலின் குமார், மணப்பாறை தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் அப்துல் சமத் ஆகியோர் முன்னிலையில் உள்ளனர்.
இதன்மூலம் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்கள் முன்னிலை வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.