சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்குவதையொட்டி, திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டுவருகிறார். இந்த வகையில் திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள கல்லக்குடியில் உதயநிதி ஸ்டாலின் தனது இரண்டாம் கட்ட பரப்புரையை இன்று (ஜன. 06) தொடங்கினார்.
அப்போது அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் திமுக, கூட்டணி கட்சிகளுக்கு வாக்குகள் சேகரித்தார். முன்னதாக கல்லக்குடி ரயில் நிலையத்தில் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறுகையில், "எனது தாத்தா (கருணாநிதி) இந்தியை எதிர்த்து போராட்டம் நடத்திய கல்லக்குடி ரயில்வே நிலையத்தை முதல் முறையாகப் பார்வையிடுகிறேன். மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்னும் தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு தொடர்கிறது. இந்திக்கு நாங்கள் எதிரி அல்ல. இந்தி திணிப்புக்குதான் எதிரி" என்றார்.
இதனைத்தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் திருச்சி மாவட்டம் முசிறி, தொட்டியம் பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, அவர் பாலசமுத்திரம் பகுதியில் வெற்றிலை விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.
இதைத் தொடர்ந்து திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூரில் பொதுமக்களிடத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக, பாஜகவை ஓட ஓட விரட்டி அடித்தீர்கள். திமுக கூட்டணிக்கு 39 தொகுதிகளில் வெற்றியைக் கொடுத்தீர்கள். திமுகவை நாட்டிலேயே 3ஆவது பெரிய கட்சியாக மாற்றிக் காட்டினீர்கள். மோடியின் எடுபிடியாக எடப்பாடி பழனிசாமி உள்ளார். நம்முடைய வரிப் பணத்தில் இருந்து அவரைப் புகழ்ந்து விளம்பரம் கொடுத்துக் கொள்கிறார். மோடிக்கு அடிமையாக இருப்பதில் பழனிசாமிக்கும், பன்னீர்செல்வத்துக்கும் இடையே போட்டி நிலவுகிறது.
நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடையச் செய்ததால், பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டு மக்கள் மீது கோபம் உள்ளது. அதனால் நாம் என்ன கேட்டாலும் செய்ய மாட்டார்கள். கஜா புயல் பாதிப்புக்கு நிவாரணம் தரவில்லை.
டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராடிவருகின்றனர். இதுவரை 60 விவசாயிகள் இறந்துவிட்டனர். பாஜகவுடன் கூட்டணியில் இருந்த கட்சிகள் வெளியேறிவிட்டன. ஆனால் வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு நல்லது என எடப்பாடி சொல்கிறார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தவரை தமிழ்நாட்டில் நீட் தேர்வு கொண்டு வரப்படவில்லை. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடன் நீட் தேர்வை திணித்துவிட்டனர். இதனால் ஆண்டுதோறும் மாணவர்கள் உயிரிழந்துவருகின்றனர். திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்துசெய்யப்படும்.
பொள்ளாச்சியில் இளம்பெண் பாலியல் வழக்கில் பொள்ளாச்சி அதிமுக நிர்வாகியை சிபிஐ கைது செய்துள்ளனர். மாணவர்கள், விவசாயிகள், பெண்கள் என யாருக்கும் இந்த ஆட்சியில் பாதுகாப்பில்லை" என்று கூறினார்.