தேமுதிக கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். தேர்தல் பரப்புரையின்போது எதிர்க்கட்சிகளை விமர்சித்து பேசும் விஜய பிரபாகரன் நாகரிகமில்லாமல் பேசுகிறார், மைக் கிடைத்தால் மனதில் தோன்றுவதெல்லாம் பேசி வருகிறார் என்ற விமர்சனத்திற்கு ஆளானார்.
இந்நிலையில், திருச்சி தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் மருத்துவர் இளங்கோவனை ஆதரித்து நேற்று மாலை மணப்பாறை பகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் திமுக -காங்கிரஸ் கட்சிகளை விமர்சித்து பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
மோடி பிரதமராக வரவேண்டும் என விரும்பிய கூட்டணி இது. இந்தக் கூட்டணி மத்தியிலும், மாநிலத்திலும் ஒன்றாக இருந்தால்தான் நம் மக்களுக்கு நல்லது செய்ய முடியும். நமது முதல் கோரிக்கை நதிகளை இணைப்பது, அது நிச்சயம் நடக்கும். இந்த கோரிக்கையை நமது வேட்பாளர் இளங்கோவன் நிச்சயம் நிறைவேற்றுவார்.
திருச்சி மாவட்டத்தில் வசிக்கும் மக்கள் காவிரி தண்ணீரை நம்பித்தான் வாழ்கின்றனர். எவ்வளவுதான் நகரங்கள் வளர்ந்தாலும், விஞ்ஞானம் வளர்ந்தாலும் விவசாயத்தை நாம் கைவிடக்கூடாது. நமக்கு விவசாயம்தான் சோறு போடுகிறது. ஆனால், திமுக என்று ஆரம்பித்தால் ஒரு பக்கம் லைட் எரியவில்லை, காங்கிரஸ் என்று ஆரம்பித்தால் இன்னொரு பக்கம் லைட் எரியவில்லை. இரண்டு கட்சிகளின்பெயரைச் சொன்னால் தமிழ்நாடே இருளில்தான் மூழ்கி இருக்கும்.
நான் சென்னையில் இருப்பதாக நீங்கள் நினைக்க வேண்டாம். என்னை விஜயகாந்த் பையன் என்று ரொம்ப பெரிதாக பார்க்காதீர்கள், உங்களுடைய நண்பராக என்னைப் பாருங்கள். இதை உங்களுடைய கைதட்டலுக்காக பேசவில்லை; கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவேன். இங்கு பெண்கள் வாக்கு அதிகம். எனவே உங்களுடைய வருங்காலத்தை யோசித்து, சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என அவர் கூறினார்.