தமிழ்நாட்டில் கரோனா பரவல் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள், தேநீர் கடைகள், டாஸ்மாக் உள்ளிட்ட அனைத்துவிதமான கடைகளும் அடைக்கப்பட்டன.
டாஸ்மாக் மூடியதையடுத்து திருச்சி மாவட்டத்தில் பரவலாக கள்ளச்சாராயம் தலைதூக்கத் தொடங்கியது. மேலும் பலர் மதுபான பாட்டில்களை வெளி மாநிலங்களிலிருந்து கடத்திவந்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்துவந்தனர்.
அத்தோடு ஊரடங்கு குறித்து முன்கூட்டியே அறிந்து டாஸ்மாக் மதுபான கடைகளில் மதுபானங்களை சிலர் வாங்கி குவித்துவைத்திருந்தனர். இவற்றை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து கொள்ளை லாபம் பார்த்தனர்.
கள்ளச்சந்தையில் மது விற்பனையை தடுப்பதற்காகக் காவல் துறையினர் முடுக்கிவிடப்பட்டனர். இந்த வகையில் திருச்சி மாவட்டம் சிறுகனூர் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டது.
இந்தச் சோதனையில் மதுபான பாட்டில்கள் அதிக அளவில் பறிமுதல்செய்யப்பட்டன. ஆனால் பறிமுதல்செய்யப்பட்ட மதுபான பாட்டில்களுக்கு உரிய கணக்கு காட்டாமல் காவலர்கள் மறைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை உயர் அலுவலர்கள் ஆய்வுசெய்தனர்.
மேலும் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர்களிடத்தில் தீவிர விசாரணை நடந்தது. அப்போது பறிமுதல்செய்யப்பட்ட மதுபான பாட்டில்கள் கள்ளத்தனமாக விற்பனை செய்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து விசாரணை அறிக்கை திருச்சி சரக டிஐஜி ராதிகாவுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. இதனடிப்படையில் திருச்சி சிறுகனூர் காவல் நிலைய ஆய்வாளர் சுமதி, தலைமைக் காவலர் ராஜா ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தலைமைக் காவலர் ராஜா மூலம் ஆய்வாளர் சுமதி மதுபான பாட்டில்களை விற்பனை செய்தது தெரியவந்ததன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பாளையங்கோட்டை மத்திய சிறை ஜெயிலர் பணியிடை நீக்கம்