திருச்சி: கருணாநிதியின் 100 ஆண்டு விழாவை முன்னிட்டு திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள கலைஞர் அறிவாலயத்தில் திமுக திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் பல்வேறு அணிகளுக்கான கருத்துரை கூட்டம் இன்று(நவ.28) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழக நீர்வள ஆதாரத்துறை அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் தலைமை வகித்தார். மேலும் இந்தக் கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த கருத்துரை கட்டத்தில் சிறப்புரை ஆற்றிய நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் பேசியதாவது, "திருச்சியில் சற்று முன்னர் 100 அடியில் கொடியை ஏற்றினேன். இதைக் கண்டு அசந்து போனேன். இந்தக் கொடி கருணாநிதியின் ரத்தத்தில் உருவானது. எதையும் சாதிக்கும் திறமை மற்றும் வல்லமை அமைச்சர் அன்பில் மகேஷ்க்கு இருக்கிறது. ஆனால் எதுவும் தெரியாமல் போல் நடிக்கும் திறமையும் அவரிடம் உள்ளது.
கருணாநிதிக்குப் பின்னர் மு.க ஸ்டாலினின் பேச்சாற்றலைக் கண்டு நான் வியந்தேன். மூன்றாவது தலைமுறை அவரை விட சிறப்பாக செயல்படுகிறார். ஏனென்றால், மண் வாசனை அப்படி. கருணாநிதிக்கு மட்டுமல்ல, திமுகவே முதன் முதலில் தேர்தலில் போட்டியிடுவதாக முடிவு செய்து அறிவிக்கப்பட்ட இடமும் திருச்சி தான். தமிழ்நாட்டின் தலைநகர் மத்தியில் இருக்க வேண்டும் என்றால் அது திருச்சி தான். அப்படி ஒரு காலமும் வரும்.
திருச்சியில் வாழையடி வாழையாக கட்சியை வளர்த்தவர்கள் தான் திமுகவின் உயர் நாடி. மற்ற கட்சிக்கு எல்லாம் உயிர் நாடி உயிரோடு இல்லை. இருக்கிற இடம் தெரியாமல் போய் இருக்கும். இமயத்தின் மீது வீசி இருந்தாலும் தூள் தூளாக போய் இருக்கும். நாங்கள் ஆண்டதை விட வெளியே நின்றது தான் அதிகம். நாங்கள் நின்றதற்கான காரணம் எங்களின் கொள்கைக்காக.
எமர்ஜெண்சியை எதிர்த்த திமுகவின் சாதனை: காங்கிரஸ் இரண்டாக பிரிந்த போது, இந்திரா காந்திக்கு ஆதரவு குறைந்தது. அப்போது கருணாநிதி 25 எம்.பிகள் வாயிலாக அவருக்கு மிகப்பெரிய ஆதரவை அளித்தார். இந்தியாவில் எமர்ஜெண்சியை எதிர்த்து தீர்மானம் இயற்றிய ஒரே கட்சி திமுக தான். கருணாநிதியின் பெயரை, கட்சியை காப்பாற்றுவாரா மு.க.ஸ்டாலின் என்று எண்ணி, ஒவ்வொரு இடத்திலும் உற்று நோக்குவேன். இதை நான் ஸ்டாலினிடமே கூறி இருக்கிறேன். ஆனால் என் எண்ணத்தைக் கடந்து அவர் சிறப்பாக செயல்பட்டு காட்டினார். தற்போதைய திமுக தலைமை உருவாக்கும் வருங்கால தலைமையையை நான் தலைமேல் வைத்து தாங்குவேன்" எனத் தெரிவித்தார்.
சேவையில் தலைவரை மிஞ்சும் அன்பில் மகேஷ் - அமைச்சர் துரைமுருகன் புகழாரம்: தொடர்ந்து பேசிய அவர், "ஒட்டு மொத்த திமுகவில் உனக்கென்று ஒரு இடம் இருக்கும், உனக்கென்று ஒரு நாடு இருக்கும், அதில் திமுக கொடி இருக்கும்" என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு புகழாரம் சூட்டினார். மேலும், "ஆனால் தலைவரையே மிஞ்சக்கூடிய அளவில் நம் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செயல்படுகிறார். முதலில் கட்சி தான். பின்னர் தான் பாசம், குடும்பம் எல்லாம் என்று செயல்பட்டுகொண்டு இருக்கிறார். அப்படி தான் கருணாநிதியும் இருந்தார்.
உரசி பார்க்கும் குணம் மகேஷ்க்கு இல்லை. ஒதுங்கி போகிற குணம் உள்ளது. நல்ல பன்பாடு அவரிடமும் உள்ளது. வாத்தியார்களை சமாளிப்பது மிகவும் கஷ்டம். இளம் வயதாக இருந்தாலும் ஆசிரியர் போராட்டத்தை இனிமையாக முடித்து வைத்து விட்டார். நான் எவ்வளவு நாள் இருப்பேனோ தெரிய வில்லை. ஆனால் எனக்கு பின்னாலும் கட்சி கண்டிப்பாக சிறப்பாக இருக்கும். கட்சி சிறப்பான செயல்பாடுகளுடன் இருக்கும்பட்சத்தில் நான் நிம்மதியாக இருப்பேன்" என பேசியது கூட்டத்தில் பங்கேற்ற அனைவரையும் கண்கலங்கச் செய்தது.
இதையும் படிங்க: “1 டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலம் என்ற இலக்கு வெகு தொலைவில் இல்லை” - முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்!