திருச்சி: ஸ்ரீரங்கம் மாம்பழச்சாலை பகுதியில் சாக்சீடு என்ற குழந்தைகளுக்கான ஆதரவற்றோர் காப்பகம் செயல்பட்டு வருகிறது. அந்தக் காப்பகத்தில் அரசு மருத்துவமனைகளில் விட்டுச் செல்லப்படும் தொட்டில் குழந்தைகள், இங்குக் கொண்டு வந்து பராமரிக்கப்பட்டு வருகிறது.
இதில் சுமார் 30 குழந்தைகள் அந்த காப்பகத்தில் உள்ளனர். இந்நிலையில் நேற்று முதல் அந்த காப்பகத்திலிருந்த கை குழந்தைகள் 8 பேருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. வயிற்றுப்போக்கைத் தொடர்ந்து இரவு மூச்சுத் திணறலும் அந்த குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து காப்பக நிர்வாகிகள் உடனடியாக திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் அந்த குழந்தைகளை அனுமதித்தனர்.
அதன் பின்னர், 8 குழந்தைகளுக்கும் அங்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட குழந்தைகள் அனைவரும் கைக்குழந்தைகள் என்பதால், குழந்தைகள் வார்டில் அவர்களுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், இந்த குழந்தைகளுக்குத் தினமும் வெளியிலிருந்து பசு மாட்டுப் பால் வாங்கப்பட்டு குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. நேற்று பால் கொடுத்த பின்பு தான் குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளதாகக் காப்பக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். அதனால் பாலில் ஏதேனும் பிரச்சனையா? அல்லது வேறு காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:ஆசிரம வழக்கில் கைதான 8 பேரை 3 நாட்கள் சிபிசிஐடி விசாரிக்க அனுமதி!