திருச்சி மாவட்டம், மணப்பாறை மஸ்தான் தெருவைச் சேர்ந்தவர், மல்லிகா. இவர் ஆடைகள் விற்கும் கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு கணவனை இழந்த மல்லிகா, தற்போது தனது இரண்டு மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார்.
இவரது மூத்த மகள் ஹேமபாரதி கால் டாக்ஸி ஓட்டுநர், தினேஷ் என்பவரை கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டு, கூட்டுக் குடும்பமாக மாமியார் வீட்டில் வசித்து வந்துள்ளார். ஹேமபாரதி தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
இந்நிலையில் ஹேமபாரதியை கணவர் தினேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் கடந்த சில மாதங்களாக வரதட்சணை கேட்டு தகாத வார்த்தைகளால் பேசி, அடித்து துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஹேம பாரதி பிரச்னையைத் தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தினேஷ் குடும்பத்தினரிடம் கேட்ட மல்லிகாவை, அவரது குடும்பத்தினர் கடுமையாகப் பேசியுள்ளனர். மேலும் ஆத்திரம் தாங்காத தினேஷ், அவரது தம்பி ராஜேஷ் குமார், மாமா மதுரை வீரன், அத்தை லீலாவதி உள்ளிட்ட 4 பேரும் ஹேமபாரதி மற்றும் அவரது குடும்பத்தினரை கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
இதுகுறித்து மணப்பாறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 4 பேரையும் கைது செய்யக்கோரி, ஹேமபாரதி ஜூலை மாதம் 27ஆம் தேதி புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், பிரச்னையைப் பேச்சுவார்த்தையில் முடித்துக் கொள்ளுங்கள் என்று கூறியதால், மனமுடைந்த ஹேமபாரதி, அவரது குடும்பத்தினருடன் மணப்பாறை காவல் நிலையம் முன்பு அமர்ந்து சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலாக தர்ணாவில் ஈடுபட்டார்.
இதனையடுத்து உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை உயர் அலுவலர்கள் உறுதியளித்ததை அடுத்து ஹேம பாரதி, அவரது குடும்பத்தினர் தர்ணாவை கைவிட்டனர்.