திருச்சி-தஞ்சாவூர் நெடுஞ்சாலை எண் 83இல் திருச்சி பால்பண்ணை-துவாக்குடி வரை சர்வீஸ் சாலை அமைக்கக்கோரி ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டம் நடந்துவருகிறது. இங்கு சர்வீஸ் சாலை அமைக்கத் தேவையான நிலத்தை கையகப்படுத்த 2014ஆம் ஆண்டு மத்திய அரசிதழில் அறிவிக்கை வெளியிடப்பட்டது.
இந்த அறிக்கையை தமிழ்நாடு அரசு செயல்படுத்தாமல் காலம் தாழ்த்திவருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து திருச்சி பால்பண்ணை துவாக்குடி சர்வீஸ் சாலை மீட்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் சக்திவேல், சண்முகம், சுப்பிரமணியன், நடராஜன் ஆகியோர் கூட்டாக இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
இந்தப் பகுதியில் சர்வீஸ் சாலை அமைக்காததால் ஐந்து ஆண்டுகளில் 5,000 விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இதன் மூலம் சுமார் ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். தேர்தலில் வாக்குக் கேட்டுவரும் அனைத்துக் கட்சியினரும் சர்வீஸ் சாலை அமைக்க ஆதரவு அளிக்கின்றனர்.
ஆனால், ஆட்சிக்கு வந்தபின்னர் கண்டுகொள்வதில்லை. தற்போதைய மத்திய அரசின் உத்தரவை செயல்படுத்த தமிழ்நாடு அரசு மறுத்துவருகிறது. உயர் நீதிமன்றத்தில் இருந்து இறுதி தீர்ப்பு வரவேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார்.
ஆனால், சமீபத்தில் துவாக்குடி பகுதியில் பரப்புரை மேற்கொண்டபோது சாலை அமைக்கப்படும் என்று முதலமைச்சர் கூறுகிறார். இப்படி மாறி மாறி பேசிவருகின்றனர். இதனால் சர்வீஸ் சாலை அமைக்காததை கண்டித்து வரும் மக்களவைத் தேர்தலை புறக்கணிப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் சுமார் ஒரு லட்சம் பேர் வாக்களிக்க மாட்டார்கள். குறைந்தபட்சம் சர்வீஸ் சாலை அமைப்பதற்கான நிலத்தை கையகப்படுத்தும் பணியை தொடங்கினால்தான் நாங்கள் தேர்தலில் கலந்து கொள்வோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.