திருச்சி: சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் திருச்சி மேற்கு சட்டப்பேரவைத் தொகுதி திமுக உறுப்பினர் கே. என். நேரு தலைமையில் நடைபெற்றது. இதில், ரூ. 1.50 லட்சம் மதிப்பில் இரண்டு பேருக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், 3 சக்கர சைக்கிள்கள் மடக்கு சக்கர நாற்காலிகள் மற்றும் முடநீக்கியல் சாதனங்கள் போன்றவை மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலகத்தில் வழங்கப்பட்டது. விழாவில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நேரு, "கடந்த நான்கு ஆண்டுகளில் அதிமுகவினர் விவசாய கடன் கோரி வங்கிக்கு சென்றால், அவர்களுக்கு உடனடியாக கடன் வழங்கப்பட்டது. திமுகவினர் யாருக்கும் விவசாய கடன் பெரிய அளவில் வழங்கப்படவில்லை. எனவே முதலமைச்சர் பயிர்க்கடன் தள்ளுபடி செய்துள்ளார். இதனால் 90 சதவீதம் பயனடைவது அதிமுகவினர் மட்டுமே.
சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோரின் சொத்துக்கள் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் பறிமுதல் செய்யப்படுகிறது. ஜெயலலிதா இறந்துவிட்டார் என்பதால் அவருடைய சொத்துக்களை பொறுமையாக கைப்பற்றிக் கொள்ளலாம் என்று அதிமுகவினர் எண்ணுகிறார்கள்.
கூட்டணிக் கட்சிகளை நாங்களாக வெளியேற்றமாட்டோம். ஐஜேகே கட்சித் தலைவர் பாரிவேந்தர் தனித்து போட்டியிடுவோம் எனக் கூறினால் அது அவருடைய விருப்பம்.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்பதற்கு முன்னோட்டமாக திருச்சியில் நடைபெறவிருக்கும் மாநாடு அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. இதற்கான தேதி இன்னும் இரண்டு நாள்களில் அறிவிக்கப்படும். ஐ பேக் நிறுவனத்திற்கும், திமுகவிற்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. எங்களை (திமுக) வெற்றிப் பெற வைக்கவே ஐபேக் நிறுவனத்தினர் பாடுபடுகின்றனர்" என்றார்.