திருச்சி: முழுமுதற்கடவுளான விநாயகரின் பிறந்த நாளை, விநாயகர் சதுர்த்தி விழாவாக உலகம் முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடுகின்றனர். இந்த நிலையில் 'தென் கைலாயம்' என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை கோயிலில் உச்சிப்பிள்ளையார் மற்றும் அடிவாரத்தில் இருக்கும் மாணிக்க விநாயகருக்கு தலா 75 கிலோ எடையுள்ள 150 கிலோ எடை கொண்ட பிரமாண்ட கொழுக்கட்டைப்படைக்கும் நிகழ்வு கடந்த 2004ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, கரோனா தொற்று காலம் என்பதால் கொழுக்கட்டை படைக்கும் நிகழ்வு, எடை குறைக்கப்பட்டு பொதுமக்களின்றி நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த ஆண்டு கரோனா தொற்று குறைந்ததால் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் காரணமாக, மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் மற்றும் மாணிக்கவிநாயகர் சந்நிதியில் தலா 75 என 150 கிலோ எடையுள்ள கொழுக்கட்டை ஆனது தற்பொழுது படைக்கப்பட்டு வருகிறது.
இந்த கொழுக்கட்டையில் அரிசி மாவு, வெள்ளம், பொட்டுக்கடலை, எள் போன்றவை சேர்த்து மடப்பள்ளியில் தயாரிக்கப்பட்டு, மடப்பள்ளியில் இருந்து, தற்போது எடுத்துவரப்பட்டு உச்சிப்பிள்ளையாருக்கும், மாணிக்க விநாயகருக்கும் படைக்கப்பட்டது.
தற்போது கரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் காரணமாக இன்று வழக்கத்திற்கு அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டு வருகின்றனர். இதையொட்டி, காலை முதலே விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு ஆராதனை நடைபெற்று வருகிறது.
முன்னதாக மலைக்கோட்டை தாயுமானசாமி கோயில் யானை லட்சுமிக்கு கஜ பூஜை செய்யப்பட்டது. மேலும் விநாயகர் சதுர்த்தியை திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் அதிகாலை முதலே சிறப்புப்பூஜைகள் நடைபெற்று ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க:மணல் பிள்ளையார் முதல் புஷ்பா பிள்ளையார் வரை - சிறப்பு புகைப்படத் தொகுப்பு