கரோனா வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. சமீபத்தில் டெல்லியில் நடந்த சமய மாநாட்டில் கலந்துகொண்டவர்களில் அதிகமானவர்களுக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து தமிழ்நாட்டிலிருந்து இந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதனடிப்படையில் திருச்சியிலும் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களை அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்தனர். இதில் 17 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
கரோனா தொற்றின் காரணமாக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 19 பேருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து 36 பேரும் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டு தொடர் கண்காணிப்பிலும், தொடர் சிகிச்சையிலும் வைக்கப்பட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து இவர்களது வீடு அமைந்துள்ள திருச்சி மாவட்டம் லால்குடி, புறத்தாக்குடி, முசிறி கரட்டாம்பட்டி, உறையூர் பாக்குபேட்டை, தில்லைநகர், ரஹ்மானியாபுரம், உறையூர் பாளையம் பஜார், பீமநகர், அண்ணா நகர், புத்தாநத்தம், மணப்பாறை, மண்ணச்சநல்லூர், தென்னூர் ஆழ்வார்தோப்பு, நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதி, அண்டகொண்டான், சமயபுரம் கூத்தூர், காஜா நகர், காஜாமலை, துவாக்குடி மலை ஆகிய பகுதிகள் காவல் துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. இந்தப் பகுதிகள் அனைத்திலும் தடுப்புகளை ஏற்படுத்தி சாலைகள் அமைக்கப்பட்டன. வெளிநபர்கள் யாரும் உள்ளே செல்லவும், அங்கிருந்து யாரும் வெளியே வருவதற்கும் காவல் துறையினர் தடை விதித்துள்ளனர்.
இந்நிலையில் தமிழ்நாடு தலைமை செயலர் சண்முகம் இன்று கரோனா பாதித்தவர்கள் பட்டியலை அறிவித்தார். அதில் “மாநிலம் முழுவதும் இன்று மட்டும் 58 பேர் கரோனா தாக்குதலுக்கு ஆளாகியிருக்கின்றனர். இதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் பாதித்தவர்கள் எண்ணிக்கை 969 ஆக அதிகரித்துள்ளது. உயிர் பலி 10 ஆக உயர்ந்துள்ளது.
திருச்சி மாவட்டத்தில் இன்று மட்டும் 3 பேர் கரோனா தாக்குதலுக்கு ஆளாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 39ஆக அதிகரித்துள்ளது.
இதன்மூலம் தமிழ்நாட்டில் அதிகம் பாதித்த 17 மாவட்டங்களின் சிவப்பு நிற பட்டியலில் திருச்சி 9ஆவது இடத்தில் இடம்பெற்றுள்ளது. இதுதவிர திருச்சியில் ஈரோடு, கரூரைச் சேர்ந்த இருவர் கரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வந்தனர். அதில் ஈரோடு இளைஞர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினார்” என்றார்.
இதையும் படிங்க: பிளாஸ்மா சிகிச்சை என்றால் என்ன? விவரிக்கிறார் டாக்டர் ஆஷா கிஷோர்