திருச்சி தனியார் பொறியியல் கல்லூரியில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. தனியார் அமைப்பு நிர்வாகி அல்லிராணி, துணைத் தலைவி டாக்டர் ரமணி தேவி, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் காமராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ரமணி தேவி பேசுகையில், 'கொரோனா வைரஸ் நோய் தற்போது ஈரான், இத்தாலி, சீனா, கொரியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் தீவிரமாகப் பரவிவருகிறது.
கடந்த மாதம் சீனாவில் இந்த நோயால் தினமும் 3,500 பேர் பாதிக்கப்படுவதாகச் செய்திகள் வெளியாகின. தற்போது இந்த எண்ணிக்கை குறைந்துள்ளது. இதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான் காரணம். இந்நோய்க்கான தடுப்பு மருந்து, சிகிச்சை முறைகளைக் கண்டுபிடிக்குமாறு மருத்துவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதன் தன்மையை மாற்றி வருகிறது. தினமும் ஒரு தன்மையில் அந்த நோய் பரவுகிறது.
இந்நோய் கிருமிகள் தற்போது அடுத்த தலைமுறைக்கும் பரவிவிட்டது. குழந்தைகள், முதியவர்கள் மற்றும் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், உடல் பருமன், புற்றுநோய் போன்ற நோய்களுக்கு ஆளாகியவர்களை இந்த நோய் எளிதில் தாக்குகிறது. தற்போதைய சூழ்நிலையில் இதற்குச் சிகிச்சை முறை, மருந்து எதுவும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. பரவாமல் பாதுகாக்கும் நடவடிக்கை மட்டுமே மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
சீனாவிலுள்ள மூலிகை மருந்துகளுக்கு நிகராக இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் அதிகளவில் மருந்துகள் உள்ளன. அதனால், நமது பாரம்பரிய உணவு முறையைப் பின்பற்ற வேண்டும். உணவில் மிளகு காரம்தான் சேர்க்கப்படவேண்டும். மிளகாய் காரம் சேர்க்கப்படுவதால் அல்சர் போன்ற நோய்கள் வருகின்றன. கொரோனா நோயைத் தடுக்க கை கழுவும் முறையைச் சிறந்த தடுப்பு முறையாகும்.
மாடிப்படிகளில் ஏறி இறங்கும்போது கைப்பிடிச் சுவரைப் பிடித்துக்கொண்டு செல்லக்கூடாது. ஏற்கெனவே அதில் படிந்திருக்கும் கிருமிகள் நம் கை மூலம் பரவும். கொரோனா மட்டும் கிடையாது. இதர வைரஸ் நோய்களும் இதன் மூலம் பரவும். நமது நாடு தூசிகள் நிறைந்த நாடு. அதனால் கை கழுவும் பழக்கத்தை வழக்கமாக மேற்கொள்ளவேண்டும். நம் கைகள் மூலம் மூக்கு, வாய் போன்றவற்றை அடிக்கடி தொடக்கூடாது.
தமிழ்நாட்டில் நிலவும் வெப்பநிலையில் கொரோனா நோய் பரவ வாய்ப்பு கிடையாது. 15 டிகிரி செல்சியஸ் இருந்தாலே கொரோனா கிருமி அழிந்துவிடும். சீனாவில் பாம்பு போன்றவற்றை சமைக்காமல் அப்படியே சாப்பிடும் நிலை இருப்பதால் இந்நோய் அங்கு எளிதில் பரவுகிறது. அதனால் அசைவ உணவுகளைப் பெரும்பாலும் தவிர்த்துவிடவேண்டும். இயற்கையோடு ஒன்றிய சைவ உணவு வகைகளைச் சாப்பிட வேண்டும்.
மூச்சுத் திணறல், உடல் வலி, தலை வலி, இருமல், சளி போன்றவை இந்நோய்க்கான அறிகுறியாகும். இத்தகைய அறிகுறி இருந்தாலே அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்று நோய்த் தாக்குதல் இருக்கிறதா என்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். நோய்த் தாக்குதல் இருந்தால் உடனடியாக அதிகப்படியான மூச்சுத்திணறல் ஏற்படும்.
நுரையீரல், சிறுநீரகம் போன்ற உடல் உறுப்புகள் அடுத்தடுத்து செயலிழந்து உயிரிழப்பைச் சந்திக்க நேரிடும். 100 பேருக்கு இந்நோய் இருந்தால் 2 விழுக்காடுக்கும் குறைவானவர்களே இறப்புகளைச் சந்திக்கின்றனர். 52 விழுக்காடு பேர் குறைந்தளவிலான தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். 15 விழுக்காடு பேர் கடுமையான பாதிப்புக்குள்ளாகின்றனர். 3 விழுக்காடு பேர் மட்டுமே சிக்கலுக்கு ஆளாகின்றனர்.
அதேபோல் செல்லப் பிராணிகளைத் தொடக்கூடாது. அவற்றைப் படுக்கைகளில் அனுமதிக்கக்கூடாது. கை கழுவும்போது துணி வகைகளைத் துடைப்பதற்குப் பயன்படுத்தவேண்டும். டிஸ்யூ பேப்பர்களைப் பயன்படுத்தக்கூடாது. டிஸ்யூ காகிதங்களை அவ்வளவு எளிதில் அழிக்க முடியாது. அதனால், துணி வகைகளைப் பயன்படுத்துவதே உகந்ததாகும். மக்கள் அதிகம் கூடும் பகுதிக்குச் செல்வதைத் தவிர்த்து தனிமையில் இருக்க வேண்டும்.
வெளிநாடுகளுக்குச் சென்று வருபவர்களுக்கு இத்தகைய நோய் அறிகுறி இருந்தால் உடனடியாகச் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். அத்தகைய நபர்களுக்கு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இந்தியாவிலிருந்து வாரத்திற்கு 91 விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதில் வரும் பயணிகளைச் சோதனைக்கு உள்ளாக்க அரசு உத்தரவிட்டுள்ளது' என்றார்.
இதையும் படிங்க: கொரோனாவால் முடிமூடியுடன் அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு வந்த உறுப்பினர்!