திருச்சி மாவட்டம் மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் அக்டோபர் 25ஆம் தேதி மாலை 5:30 மணியளவில் இரண்டு வயது ஆண் குழந்தை சுஜித் வில்சன் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான். சுஜித்தை மீட்கும் பணி கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து நடைபெற்றுவந்தது. இந்நிலையில் இன்று (அக்.29) அதிகாலை 2.20 மணிக்கு வருவாய்த்துறை நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ”ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சுஜித்தை மீட்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வந்தது. ஆழ்துளைக் கிணற்றிலிருந்து இரவு 10.30 மணியளவிலிருந்து அழுகிய வாடை வருகிறது. சுஜித்தின் கை சிதைந்துள்ளது" என்று சுஜித் இறந்த அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டார்.
மேலும் பேசுகையில், தற்போது குழிதோண்டும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் உடலை எப்படி மீட்பது என்பது குறித்து பேரிடர் மீட்புக் குழுவின் வழிகாட்டுதலின்படி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் உயிர் பிழைக்க வேண்டும் என்று அனைவரும் பிரார்த்தனை செய்துவந்த நிலையில், சுஜித் உயிரிழந்ததாக வந்துள்ள செய்தி பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.