திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது திருச்சி மாவட்ட கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் வீரமுத்து தலைமையிலான சங்கத்தினர் திரளாக வந்து மாவட்ட ஆட்சியர் சிவராசுவிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் மத்திய அரசின் உரிமம் பெற்று கூட்டாக கட்டுப்பாட்டு அறை வைத்து செயல்பட்டுவருகிறோம். அரசு கேபிளுக்கு புதிதாக சேர்மன் அறிவித்த பின்னர் அரசு கேபிள் டிவி நிர்வாகம் தனியார் ஆப்பரேட்டர் விலை போட்டியாக கருதி அவர்களை அழிக்கும் செயலில் ஈடுபட்டுவருகிறது.
தனியார் ஆப்பரேட்டர்கள் உள்ள பகுதிகளில் ஆளுங்கட்சி பிரமுகர்கள் புதிய ஆப்பரேட்டராக உருவாக்கி நடைமுறையில் இல்லாத விதிமுறைகளைக் கூறி தனியார் இணைப்புகளை அரசு அலுவலர்கள், காவல் துறையினரை பயன்படுத்தி ஒளிபரப்புக்கு இடையூறு செய்துவருகிறார்கள். டிராய் விதிமுறைப்படி நோடல் அலுவலராக உள்ள மாவட்ட ஆட்சியர், கேபிள் தொழிலுக்கான நீதியை பொதுவாக வழங்க வேண்டும்.
அதனால் அரசு கேபிள் தாசில்தார் நியாயமாக நடந்து கொள்ளாததால் தமிழ்நாடு முதலமைச்சர் இவ்விஷயத்தில் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு அரசின் கல்வி தொலைக்காட்சியை பாகுபாடின்றி அனைத்து தனியார் கட்டுப்பாட்டு அறைக்கும் வழங்க வேண்டும்.
தனியார் கேபிள் டிவி ஆப்பரேட்டர்களை அச்சுறுத்தும் வகையில் தெருக்களில் ஒயர்களை கொண்டுச் செல்ல ஒரு கிலோ மீட்டருக்கு 36 ஆயிரம் ரூபாய் என்று கட்டணம் வசூலிக்கும் முந்தைய விதிமுறையை அமல்படுத்தக்கூடாது. இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்திருந்தனர்.