திருச்சி மாவட்டம் மணப்பாறை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வட்ட சட்டப்பணிகள், மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை சார்பில் மருத்துவ மற்றும் இரத்த தான முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதியும், வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவருமான நீதிபதி கே.எம்.கலையரசி, குற்றவியல் நீதித்துறை நடுவர் கே.செந்தில்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். மேலும், நீதிமன்ற வளாகத்தில் அரசு மருத்துவர்கள் மரக்கன்றுகளை நட்டனர்.
இதைத்தொடர்ந்து, நீதிபதிகள் மருத்துவ முகாமை தொடங்கி வைத்து மருத்துவ பரிசோதனைகளை செய்துகொண்டனர். இதில், நீதிபதி கே.எம்.கலையரசி இரத்த தானம் செய்து இரத்த தானம் முகாமினை தொடக்கி வைத்தார். இந்த முகாமில் இரத்த பரிசோதனை, சிறுநீர், சர்க்கரை நோய், கண் சிகிச்சை, காது, மூக்கு, தொண்டை நிபுணர்கள் மற்றும் பொதுபிரிவு ஆகிய மருத்துவ குழுவினர் கலந்துகொண்டனர்.
நீதிபதிகள், வழக்கறிஞர்கள், சட்ட தன்னார்வலர்கள், நீதிமன்ற பணியாளர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்ட முகாமில் 12 நபர்கள் ரத்த தானமும், 198 நபர்கள் மற்ற பரிசோதனைகளையும் செய்துகொண்டனர்.