தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு, பிரதமர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு மனு ஒன்றினை அனுப்பியுள்ளார். அதில், “காலரா, சின்னம்மை, பெரியம்மை நோய் வராமல் தடுப்பதற்கு இயற்கையாக நஞ்சில்லாத உணவை உற்பத்தி செய்துகொடுத்த விவசாயிகள், இன்று கரோனா வைரஸ் பாதிப்பு பரவலால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அளவில்லாத துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர்.
2016ஆம் ஆண்டு முதல் வறட்சியால் சரியான சாகுபடி செய்ய முடியாமல், இந்த ஆண்டு விளைந்த நெல்லை அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொண்டு சென்றால் 25 நாட்கள் கழித்து தான் எடை போட்டு எடுத்துக்கொண்டார்கள். 40 கிலோவிற்கு ரூ.50 பெற்றுகொண்டு தான் எடுத்துக்கொண்டார்கள். தர்பூசணி, முலாம், வாழை, திராட்சை போன்ற பழப்பயிர்கள் அறுவடை செய்ய முடியாமல் பழுத்து அழுகி வீணாகின்றன. மல்லிகை, ரோஜா, செவ்வந்தி, செம்மங்கி ஆகிய பூக்கள் பறிக்காமல் செடியிலேயே காய்ந்து போகின்றன. மேலும் கேரட், குடை மிளகாய், பச்சைமிளகாய் போன்றவையும் பறிக்கப்படாமல் பாழ்படுகின்றன.
கரோனா தொற்று பரவாமல் இருக்க அணியும் முகக் கவசம் தயாரிக்க பருத்தி அவசியம். ஆனால் அந்த பருத்தியை விவசாயிகளிடம் பாதி விலைக்குகூட கொள்முதல் செய்ய மறுக்கும் நிலை உள்ளது. அதேபோல் பால் உற்பத்தியாளர்களும் டீ கடை, ஹோட்டல் இல்லாததால் விற்பனை செய்ய முடியாமல் வீணாகி வீதியில் கொட்டும் நிலைமை ஏற்படுகிறது. எலுமிச்சை பழம் கரோனா நோய்க்கு உகந்தது என்கிறார்கள். ஆனால் லட்சக்கணக்கான எலுமிச்சை பறித்து விற்க முடியாமல் அங்கும், இங்கும் விவசாயிகள் அலைகின்றனர்.
புதுச்சேரி அரசாங்கம் கூட விவசாயிகளுக்கு முதல் தவணையாக ஏக்கருக்கு ரூ. 5000 வழங்குகிறது. கரோனா கோரப் பிடியிலிருந்து அழிந்துவிட்ட விவசாய சமுதாயத்தை காப்பதற்கு ஏக்கருக்கு ரூ. 20 ஆயிரம் கொடுக்க வேண்டும். விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலையிலிருந்து காப்பாற்ற வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க...நாடெங்கிலும் ஒற்றுமை தீப ஒளியை ஏற்றிய மக்கள்!