சென்னை: திருச்சி மாநகராட்சியில், சாலைகளின் உயரம் அதிகரிக்கும் வகையில் போடப்பட்டுள்ள ரூ.103 கோடி மதிப்பிலான சாலை ஒப்பந்த பணிகளின் விவரங்களை சரி செய்யக் கோரி, தலைமைச் செயலாளர் வெ.இறையன்புவிடம் அறப்போர் இயக்கம் (Arappor Iyakkam) இன்று (ஜூன் 23) புகார் அளித்துள்ளது. நகராட்சி நிர்வாகத்துறையின் அமைச்சர் கே.என்.நேருவின் மாவட்டத்திலேயே சாலைப் பணிகள் சரிவர நடைபெறவில்லை என புகாரை அறப்போர் இயக்கம் எழுப்பி உள்ளது.
தலைமைச்செயலாளர் இறையன்பு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, நகராட்சி நிர்வாகத்துறை இயக்குனர் பொன்னையா, திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன் ஆகியோருக்கு அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் இது தொடர்பாக ஒரு மனு அனுப்பியுள்ளார். அந்த மனுவில், 'அறப்போர் இயக்கம், அரசாங்கத்தில் வெளிப்படைத்தன்மையும், பொறுப்புடைமையையும் கொண்டு வருவதற்காக பொதுமக்களால் நடத்தப்படும் அமைப்பாகும். அறப்போர் இயக்கம், பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் உதவியுடன் அவர்கள் பகுதிகளில் உள்ள மோசமான சாலைகளை ஆவணப்படுத்தி திருச்சி மாநகராட்சி ஆணையருக்கு கடந்த மாதம் 24.5.2023 அன்று நேரில் சந்தித்து கொடுந்திருந்தோம்.
சாலையின் உயரம் அதிகரிப்பு ஏன்?: அந்த அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் சாலைப் பணிகள் மேற்கொள்ளும் பொது சாலையின் உயரம் அதிகரிக்கக் கூடாது என்று தலைமை செயலாளரின் கடிதம் இருந்தும் அதை அப்பட்டமாக மீறி சாலை உயரம் அதிகரிக்கும்படியான வேலைக்குறிப்பை ஒப்பந்த ஆவணத்திலேயே திருச்சி மாநகராட்சியில் சில சாலைகளில் தரப்பட்டு உள்ளதை குறித்தும் விவரித்து இருந்தோம். இனிவரும் சாலை ஒப்பந்த வேலை குறிப்பை முறையாக சாலை உயரம் அதிகரிக்காத வகையில் வெளியிட கோரிக்கை வைத்திருந்தோம்.
இந்த நிலையில் கடந்த 14.6.2022 முதல் 21.6.2023 வரை தமிழ்நாடு நகர்ப்புற சாலை மேம்பட்டு திட்ட (TURIP) நிதியின் கிழ் போடப்பட்ட ரூ.103 கோடி மதிப்பிலான, புதிய தார் சாலைகளை சீரமைக்கும் மற்றும் சிமெண்ட் கான்கீரிட் சாலைகள் அமைக்கும் 81 பேகேஜ் (Package) ஒப்பந்தங்களை ஆய்வு செய்ததில் மீண்டும் சாலைகளின் உயரம் அதிகரிக்கும் வகையில் இந்த ஒப்பந்த ஆவண வேலை குறிப்புகள் தரப்பட்டு உள்ளது தெரியவந்துள்ளது.
உதாரணமாக, போடப்பட்டுள்ள 81 பேக்கேஜ் (Package) ஒப்பந்தங்களில், 74 ஒப்பந்தங்களை ஆய்வு செய்தோம். அதில் 56 தார் சாலை டெண்டர்களும் 18 சிமெண்ட் கான்கிரீட் சாலை டெண்டர்களும் அடங்கும். 56 தார் சாலைகளை சீரமைக்கும் ஒப்பந்தங்களில் அனைத்து டெண்டர்களும் சாலை உயரம் அதிகரிக்கும் வகையில் உள்ளது. சராசரியாக 7cm உயரம் அதிகரிக்கும் வண்ணம் சாலைப் பணிகளின் குறிப்பு வழங்கப்பட்டு உள்ளது. அதேபோல் 18 சிமெண்ட் கான்கிரீட் சாலைகள் அமைக்கும் ஒப்பந்தத்தில் தோண்டி எடுக்கப்படும் மண் மற்றும் பழைய சாலைகள் அளவை விட கூடுதலாக புதிய சாலை அமைக்கும் வண்ணம் ஒப்பந்தக் குறிப்புகள் உள்ளன.
17 தார் சாலைகள் அமைக்கும் ஒப்பந்த பணிகளின் விவர குறிப்பில் பழைய சாலையை தோண்டி எடுப்பதற்கான (milling) எந்தவொரு வேலை குறிப்பும் தரப்படவில்லை. சாலை உயரம் டெண்டர் பணி அளவீடு குறிப்பிலேயே (specification) அதிகரிப்பது என்பது மீண்டும் சரி செய்ய முடியாத பாதிப்புகளை ஏற்படுத்தி விடும். எனவே இவற்றை சரி செய்து டெண்டர்கள் போடப்பட வேண்டும்.
மேற்குறிப்பிட்ட குறைகளின் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து 23.6.2023 இன்று முடிய உள்ள இந்த அனைத்து ஒப்பந்தங்களையும் ரத்து செய்தோ, கால நீட்டிப்பு செய்தோ. ஒப்பந்த பணிகளில் விவரங்களில் உள்ள குறைபாடுகளை சரி செய்து இந்த ஒப்பந்தங்களை போடவேண்டும்' என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: Opposition Meeting: பாஜகவுக்கு எதிராக விறுவிறுப்படையும் எதிர்கட்சிகள் கூட்டம்