திருச்சி அப்போலோ மருத்துவமனை கழுத்து தண்டுவட அறுவை சிகிச்சை மருத்துவர்கள் மயிலன் சின்னப்பன், கெவின் ஜோசப் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய அவர்கள், "கழுத்து வலியால் தொடர்ந்து ஐந்து நாள்களுக்கு மேல் அவதிப்படுவோர் மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொண்ட பின்னரும் கழுத்து வலி தொடர்ந்தால் அது குறித்து மருத்துவர்களிடம் உடனடியாக கலந்தாலோசிக்க வேண்டும்.
கழுத்து வலியைத் தொடர்ந்து கை, கால்களில் வலி ஏற்பட்டு, நடக்க முடியாத நிலை ஏற்படும். அதோடு சிறுநீரும் வெளியேறாத நிலை ஏற்படுமாயின் அது கழுத்து தண்டுவட பாதிப்புக்கான அறிகுறியாகும். உடனடியாக மருத்துவரைச் சென்று சந்தித்தால் இதனை அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்துவிடலாம். அந்த வகையில் திருச்சியைச் சேர்ந்த அரசு தொழிற்பயிற்சி மைய பயிற்சியாளர் இளங்கோவன் (54) என்பவருக்கு கடந்த நவம்பர் மாதம் இறுதியில் இடது கால் செயலிழந்து நடக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அவர் திருச்சி அப்போலோ சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு ஏற்கனவே வலதுகால் இளம்பிள்ளைவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தது. மேலும் இடது காலில் ஒருவித இறுக்கமும், ஒருவிதமான பலவீனமும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இரு தோள்களிலும் வலியும், பலவீனமும் இருந்தது. ஒரே கால் மூலமே உடலின் எடையைச் சுமந்து நடந்ததால் ஏற்பட்டிருக்கும் தொய்வு என்று அவர் இருந்துவிட்டார். முழுமையாக நடக்க முடியாத நிலை ஏற்பட்டதால் திருச்சி அப்போலோ மருத்துவமனைக்கு வந்தார். அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொண்டதில், கழுத்து தண்டுவடத்தில் பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.
அத்தோடு கழுத்து தண்டுவடத்தைச் சுற்றியிருக்கும் தசைநார்கள் கெட்டியாக உருவாகியிருந்தது. அதுவே ஒரு எலும்பைப் போல துருத்திக் கொண்டு தண்டுவடத்தை மிக மோசமாக நசுக்கிக் கொண்டிருப்பது தெரியவந்தது. அதனை விடுவிக்காவிட்டால் அவர் மிகவும் மோசமான நிலைக்குச் செல்லக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகமாக இருந்தன. தொடர்ந்து, நோயாளியின் ஒப்புதலுடன் அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுக்கப்பட்டது.
அறுவை சிகிச்சை மூலம் இந்தப் பாதிப்புகள் சரிசெய்யப்பட்டன. திருச்சி அப்போலோ சிறப்பு மருத்துவமனையின் மூளை மற்றும் தண்டுவட அறுவை சிகிச்சை மருத்துவக் குழுவினர் இந்தச் சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்து முடித்துள்ளோம். அறுவை சிகிச்சை முடிந்த அடுத்த நாளே நோயாளிக்கு இடது காலில் வலியும் இறுக்கமும் குறையத் தொடங்கியது. இரண்டாம் நாளே அவர் துணையுடன் நடக்க ஆரம்பித்தார்.
மூன்றாம் நாள் நோயாளிக்குத் தேவையான அறிவுரை வழங்கி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். 14 நாள்களுக்குப் பிறகு அவர் எவ்வித துணையுமின்றி சுயமாக நடந்துவந்தார். சிறுநீர் கழிப்பதற்காகப் பொருத்தப்பட்டிருந்த குழாயும் அகற்றப்பட்டது. இதனால் தற்போது அவர் இயல்புவாழ்க்கைக்குத் திரும்பிவிட்டார். ஆகையால் கழுத்து வலியுடன் இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்" என்றனர்.
பேட்டியின்போது திருச்சி அப்பaலோ சிறப்பு மருத்துவமனை மண்டல தலைமை அலுவலர் ரோகிணி ஸ்ரீதர், மருத்துவமனை பொது மேலாளர் சாமுவேல், மருத்துவமனை நிர்வாகி சிவம், துணைப் பொதுமேலாளர் சங்கீத், சிகிச்சையால் குணமடைந்த இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தனர்.