திருச்சி அப்போலோ மருத்துவமனை இதய மருத்துவர் ரவீந்திரன் இன்று (செப்டம்பர் 12) செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், "மனிதனின் இதயத்தில் ரத்தம் பம்ப் செய்வதற்காக வால்வு உள்ளது. 4 வழித்தடங்களைக் கொண்ட இந்த வாழ்வு முதுமை காலத்தில் சுருங்கிவிடும். இதனால் ரத்த ஓட்டம் பாதித்து மூச்சுத்திணறல், தலைசுற்றல், நெஞ்சுவலி போன்றவை ஏற்படும்.
முன்பு இந்த வால்வு அறுவை சிகிச்சை மூலம் மாற்றப்பட்டு வந்தது. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வால்வு மட்டுமே அறுவை சிகிச்சை மூலம் மாற்றி பொருத்தப்பட்டது. ஆனால் தற்போது இந்தியாவிலேயே வால்வுகள் தயாரிக்கப்படுகின்றன.
மேலும் அறுவை சிகிச்சை இல்லாமல் நுண்துளை மூலம் இந்த வால்வு மாற்றப்படுகிறது. சென்னை, மதுரை, கோவை போன்ற நகரங்களில் மட்டுமே இத்தகைய நுண்துளை சிகிச்சை மூலம் வால்வு மாற்றப்பட்டு வந்தது. முதல்முறையாக திருச்சி அப்போலோ மருத்துவமனையில் துறையூரைச் சேர்ந்த 75 வயது முதியவர் ஒருவருக்கு நுண்துளை சிகிச்சை மூலம் வால்வு பொருத்தப்பட்டுள்ளது.
கால் தொடை பகுதியில் சிறிய அளவில் துளையிட்டு ரத்தநாளம் மூலம் இதயத்துக்குள் வயர் செலுத்தப்பட்டு, இந்த வால்வு பொருத்தப்படுகிறது. இதற்காக நோயாளிக்கு மயக்க மருந்து கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ரத்த நாளத்தில் உணர்ச்சி இருக்காது என்பதால் நோயாளி சுயநினைவுடன் இருக்கும்போதே இந்தச் சிகிச்சையை செய்யலாம்.
குறிப்பாக வயதானவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்வது என்பது சிக்கலான விஷயமாகும். இதுபோன்ற நுண்துளை சிகிச்சை முறை என்பது அவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் ஆகும். இந்தச் சிகிச்சைக்கு பின்னர் நோயாளி மறுநாளே இயல்பு வாழ்க்கையை மேற்கொள்ளலாம்.
கரோனா இதய நோயாளிகளை எளிதில் தாக்குகிறது. இந்த வைரஸ் (தீநுண்மி) காரணமாகவும் இதய வால்வு பழுதடைய வாய்ப்பு அதிக அளவில் இருக்கிறது. அதனால் எத்தகைய நோய் அறிகுறி இருந்தாலும் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
கரோனா தாக்குதலை மட்டும் மக்கள் கண்டு அஞ்சாமல் இதர நோய்கள் குறித்த பரிசோதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும். தற்போது இந்த சிகிச்சை முறை முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வரவில்லை. அந்தத் திட்டத்தின்கீழ் கொண்டுவர மருத்துவமனை நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.
முன்பு வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வால்வு பொருத்தப்பட்டதால் அதிக அளவில் செலவானது. தற்போது இந்திய வால்வு பொருத்தப்படுவதால் செலவு குறைந்துள்ளது" என்றார்.
இந்தச் செய்தியாளர்கள் சந்திப்பில் மயக்கவியல் வல்லுநர் சரவணன், மருத்துவர் சிவம், பொது மேலாளர் சாமுவேல் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.