சென்னை: தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஷால். இவர் நடிகர் சங்கத் தலைவராகவும் இருந்து வருகிறார். முன்னதாக நடிகர் விஷால், எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து நடித்த 'மார்க் ஆண்டனி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், தாமிரபரணி, பூஜை ஆகிய படங்களைத் தொடர்ந்து, தற்போது மீண்டும் இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடித்து வருகிறார்.
இது நடிகர் விஷாலின் 34வது படம் ஆகும். இப்படத்தில் பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி, கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்படத்தின் பெயர் குறித்து அறிவுப்புகள் எதுவும் வெளியாகவில்லை. தற்போது இப்படத்தின் சில காட்சிகளின் படப்பிடிப்பு, திருச்சி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகின்றன.
இதனிடையே, தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் நடிகர் விஷாலைச் சந்தித்துள்ளனர். அப்போது விவசாயிகளிடம் அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் மற்றும் அவர்களின் நலன் குறித்தும் கேட்டறிந்தார். அப்போது, அண்மையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த விவசாயி குறித்து நடிகர் விஷாலிடம் கூறப்பட்டது. அதற்கு, தான் நேரில் சென்று பார்ப்பதாக தெரிவித்தார்.
மேலும், டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகளையும், கணவனை இழந்த விவசாயக் குடும்பத்தையும் சந்தித்தார். அப்போது, அங்கு வந்திருந்த விவசாய குடும்பத்தின் குழந்தைகளிடம், அவர்களின் கல்வியை குறித்து விசாரித்தார்.
குழந்தைகளிடம், "நீ நல்லா படிப்பியா.. ஐஏஎஸ் படிக்கிறயா, நான் படிக்க வைக்கிறேன். நீ அம்மாவ காப்பாத்த வேண்டும், அதற்காக உன்னை படிக்க வைக்கிறேன்" என்று கூறினார். மேலும், டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் பலரைச் சந்தித்து, தற்போது அவர்களின் நிலை குறித்தும் கேட்டு அறிந்தார்.
இதையும் படிங்க: நடிகர் நானா படேகர் வைரல் வீடியோ விவகாரம் - விளக்கமளித்து மன்னிப்பு!