திருச்சி: திருச்சி தஞ்சாவூர் சாலை தனரத்தினம் நகர் பகுதியைச்சேர்ந்தவர், சையது அலி பாத்திமா (வயது 27). இவருக்கு ஒரு அக்கா மற்றும் தம்பி உள்ளனர். இவரின் அக்காவிற்கு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சையது முகமது அப்பாஸ் என்பவருடன் திருமணம் நடைபெற்று ஒரு குழந்தை உள்ளது.
இந்நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு அக்காவிற்கு கரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சமயத்தில் அக்காவின் குழந்தையை கவனித்துக்கொள்ள சையது அலி பாத்திமா அக்காவின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அக்காவின் கணவர் என்பவர் சையது அலி, பாத்திமாவிற்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து, தனக்கு ஒத்துழைக்காவிட்டால் மருத்துவமனையில் இருக்கும் உனது அக்காவை கொன்று விடுவேன் என மிரட்டி பலமுறை பாலியல் உறவு கொண்டுள்ளார்.
இந்நிலையில் மகளின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதை அறிந்து, அவரது தந்தை கேட்டபோது சையது அலி பாத்திமா நடந்தவற்றைக்கூறியுள்ளார். இதனையடுத்து திருச்சி கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது குறித்து அவரது தந்தை புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் விசாரணை செய்த காவல் ஆய்வாளரிடம் அக்காவின் கணவர் இந்தப்பெண்ணை நானே திருமணம் செய்து கொள்கிறேன் என்று உறுதி அளித்ததைத்தொடர்ந்து புகார் திரும்ப பெறப்பட்டது.
இதனையடுத்து சையது அலி பாத்திமாவை தனி வீடு எடுத்து தங்க வைத்து அவரிடம் எந்தவிதத் தொடர்பும் இல்லாமல் இருந்து வந்துள்ளார், சையது முகமது அப்பாஸ். இந்நிலையில் மருத்துவமனையில் சையது அலி பாத்திமாவிற்கு சிசேரியன் முறையில் குழந்தை பிறந்துள்ளது. தற்போது குழந்தை உடலில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பல லட்சங்கள் செலவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து தன்னைக்கண்டு கொள்ளாத சையது முகமது அப்பாஸின் மீது திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் சையது அலி பாத்திமா புகார் அளித்துள்ளார். புகாரானது திருச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு வந்த போது அங்கு காவல் நிலையத்தில் ஒரு தலைபட்சமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதனால் சையத் அலி பாத்திமா இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட முயன்றார். அப்போது அங்கு பணியில் இருந்த காவலர்கள் அவரை அழைத்து மாவட்ட வருவாய் ஆய்வாளரிடம் அழைத்து சென்று புகார் மனுவை அளிக்க செய்தனர்.
இதையும் படிங்க: தமிழ்நாடு ஆளுநரைத் திரும்பப்பெற வேண்டும்… தமுமுக தீர்மானம் நிறைவேற்றமுடிவு