திருச்சி: திருச்சி மாவட்டம், சமயபுரம் காவல் எல்லைக்குட்பட்ட சிறுமருதூர் ஊராட்சிப் பகுதியில் இரவில் இருசக்கர வாகனத்தில் வந்து செல்பவர்களை கல்லால் தாக்கி, வழிப்பறி கொள்ளையில் தொடர்ந்து ஈடுபட்டவர்கள் நேற்றிரவு(ஜன.30) அவ்வழியாகச் சென்ற துப்புரவுப் பணியாளர்களை தாக்கிவிட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர்.
துப்புரவுப் பணியாளர்கள் கொள்ளையர்களை திருப்பித் தாக்கியதால் கொள்ளையர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை அங்கேயே போட்டுவிட்டு தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட துப்புரவுப் பணியாளர் முருகேசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,' நான் வாளாடி ஊராட்சியில் துப்புரவுப் பணியாளராக பணியாற்றி வருகிறேன்.
புதிதாக அமைந்துள்ள திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சிறுமருதூர் பகுதியில் உள்ள பங்குனி ஆற்றில் நானும் எனது உறவினர் தாமோதரன் என்பவரும் இருசக்கர வாகனத்தில் சென்று மீன்பிடிக்கச்சென்றோம். அப்போது சிறுமருதூர் பைபாஸ் சாலையில் உள்ள பங்குனி ஆற்றங்கரையோரத்தில் இருவர் எங்களைக் கல்லால் தாக்கி, எங்களிடம் வழிப்பறியில் ஈடுபட முயன்றனர்.
கல்லால் தாக்கி வழிப்பறியில் ஈடுபட முயன்ற நபர்களைப் பிடித்து நாங்கள் அவர்களை அடிக்கவும் அவர்கள் வந்த இரு சக்கர வாகனத்தை சம்பவ இடத்திலேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றனர்.
இந்தப் பகுதியில் தொடர்ந்து இதுபோன்ற வழிப்பறி கொள்ளைச் சம்பவம் நடந்து வருகிறது. ஆனால் இந்தச் சம்பவம் குறித்து போலீசிடம் தகவல் கொடுத்தாலும் நடவடிக்கை ஒன்றும் எடுக்கப்படாமல் உள்ளது. எங்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களின் இருசக்கர வாகனம் எங்களிடம் உள்ளது என காவல் நிலையத்தில் தகவல் கொடுத்தும் இந்நாள்வரை போலீசார் வந்து எவ்வித விசாரணையும் மேற்கொள்ளவில்லை’ எனக் கூறினார்.