திருச்சி: தனியார் கல்லூரி வளாகத்தில் நடந்து சென்று கொண்டு இருந்த பெண் தூய்மைப் பணியாளர் மீது அதிவேகமாக வந்த கார் மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மணிகண்டம் பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த கல்லூரியில் ரூபி என்பவர் பல வருடங்களாக தூய்மை பணியாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் நேற்று (ஏப். 20) வழக்கம் போல் பணியை முடித்து விட்டு கல்லூரி வளாகத்தில் உள்ள சாலையில் ரூபி நடந்துச் சென்று கொண்டு இருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த ஆல்டோ கார் ஒன்று அதிவேகமாக கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்தது.
தறிகெட்டு ஓடிய கார் கல்லூரி வளாகத்தில் சென்று கொண்டு இருந்த ரூபி மீது அதிவேகமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றது. மோதிய வேகத்தில் ரூபி சில அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டார். படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய ரூபியை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரூபி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மணிகண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்லூரிக்கு அச்சிடப்பட்ட நோட்டு புத்தகங்களை வழங்குவதற்காக ஆல்டோ காரில் வந்த சீனிவாசன் என்பவர், திரும்பி செல்லும் பொழுது அதிவேகமாக காரை ஓட்டிச் சென்றதாகவும் அப்போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த கார் ரூபி மீது வேகமாக மோதி விபத்தை ஏற்படுத்தியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் கல்லூரி வளாகத்தில் குறிப்பிட்ட அளவை மீறி வாகனங்களை இயக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டு உள்ள நிலையில், அதிவேகமாக சீனிவாசன் காரை செலுத்தி விபத்தை ஏற்படுத்தி உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவ நேரத்தில் கல்லூரியில் மாணவ - மாணவிகள் யாரும் வெளியே இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கல்லூரி வளாகத்தில் ரூபி நடந்து செல்வது, பின்னால் இருந்து சீனிவாசனின் கார் தறிகெட்டு ஓடி விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் செல்வதுமான சிசிடிவி காட்சி வெளியாகி வேகமாக பரவி வருகிறது. சீனிவாசனை கைது செய்த போலீசார் வழக்கு குறித்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.