திருச்சி: லால்குடி அருகே உள்ள ஊட்டத்தூர் கிராமத்தைச் சேர்ந்த துரைராஜ் மகன் சதீஷ் (21) என்பவர், அவரது உறவினருக்கு சொந்தமான டிராக்டர் எடுத்துக்கொண்டு அதே ஊரை சேர்ந்த மருதையான் கோவில் அருகே நஞ்சை உழவு ஓட்டுவதற்காக சென்ற பொழுது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் அருகே இருந்த பாசன கிணற்றில் விழுந்தது.
திடீரென கிணற்றுக்குள் விழுந்ததை அடுத்து அக்கம்பக்கத்தில் இருந்த விவசாயிகள் பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கும் காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த லால்குடி தீயணைப்பு துறையினர் கிணற்றில் விழுந்த டிராக்டர் மற்றும் ஓட்டுநரை மீட்கும் பணியில் கிரேன் உதவியுடன் சுமார் 2 மணி நேரம் போராடி முதலில் டிராக்டரை மேலே கொண்டு வந்தனர்.
பின்னர் நீரில் மூழ்கியுள்ள ஓட்டுநரை நீச்சல் வீரர்கள் உதவியுடன் தேடி வந்தனர். நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர், சதீஷ் உடலை கயிறு மூலம் மேலே கொண்டு வந்தனர்.
சம்பவம் குறித்து சிறுகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உயிரிழந்த இளைஞர் சதீஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
விவசாய நிலத்தில் உழவுப் பணியில் ஈடுபட்டிருந்த டிராக்டர் கிணற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் ஊட்டத்தூர் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: தேனியில் ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்து - தந்தையுடன் சென்ற மகள் உயிரிழப்பு