திருச்சி மாவட்ட காவல் நிலையங்கள், காவல் அலுவலர்களின் வாகனங்களில் இருந்து அகற்றப்பட்ட வயர்லெஸ் பாக்ஸ்கள், வாக்கி டாக்கிகள் உள்ளிட்ட பழுதடைந்த பொருட்கள் திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள ஒரு அறையில் வைக்கப்பட்டிருந்தன. ஆனால், திடீரென அவைகள் மாயமாகின.
இதனால் அதிர்ச்சி அடைந்த தொழில்நுட்ப பிரிவு காவல் துறையினர், இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர். தொடர்ந்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அதிகாலையில் பணிக்கு வரும் துப்புரவு பணியாளர் சீனிவாசன் என்பவர், அவற்றை திருடி பழைய பாத்திர கடைக்கு விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
வாக்கிடாக்கிகளில் உள்ள செம்பு பொருட்களுக்கு ஆசைப்பட்டு திருடி இருப்பதும், திருச்சி வரகனேரி பகுதியில் உள்ள ஆனந்த் மெட்டல் என்ற நிறுவனத்திற்கு அவற்றை விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து கே.கே. நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து துப்புரவு பணியாளர் சீனிவாசன், கடைக்காரர் கனகராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.