திருச்சி மாவட்ட வில்வித்தை சங்கம் சார்பில் புதிய உலக சாதனை முயற்சிக்கான நிகழ்ச்சி திருச்சியில் இன்று நடைபெற்றது. இதில் ரயில்வேயில் பணிபுரியும் சகாய விஜய ஆனந்த் - ஜெயலட்சுமி ஆகியோரது இரண்டு வயது மகள் ஆராதனா புதிய உலக சாதனையை படைத்தார்.
இவர், 10 மீட்டர் பிரிவில் ஒரு மணி நேரத்தில் 166 அம்புகளை ஏவி புதிய சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் இவர் 355 புள்ளிகள் பெற்று, ஜெட்லி புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சார்பில் இதற்கான சான்றிதழை பெற்றார்.
இந்த சாதனை முயற்சியை தொடங்கி வைத்த தமிழ்நாடு வில்வித்தை சங்க பொதுச் செயலாளர் உதயகுமார் கூறுகையில், "இதற்கு முன்பு 8 மீட்டர் நீளத்தில் இருந்து மட்டுமே சாதனை படைக்கப்பட்டிருந்தது. தற்போது 10 மீட்டர் தூரத்திலிருந்து ஆராதனா புதிய சாதனை படைத்துள்ளார்" என்றார்.
அதேபோல், ஆராதனாவின் தந்தை சகாய விஜய் ஆனந்த் பேசுகையில், “ஆராதனா இந்த சாதனை படைத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. கடந்த மூன்று மாத காலமாக எனது மகள் ஆராதனாவுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. வில்வித்தை சங்கத்தினர், பயிற்சியாளர்கள் அளித்த ஊக்குவிப்பு அடிப்படையிலேயே ஆராதனா இந்த சாதனையை படைத்துள்ளார். தமிழ்நாடு அரசும் இந்த சாதனைக்கு ஆதரவாக இருந்தது” என தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாநகராட்சியின் முன்னாள் துணை மேயர் எமிலி ரிச்சர்ட், வில்வித்தை சங்க திருச்சி மாவட்ட செயலாளர் ராஜதுரை, கராத்தே வீரர் டிராகன் ஜெட்லீ மற்றும் பலர் கலந்து கொண்டனர்.