திருப்பூர் மாவட்டம் இடுவம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பிருந்தா. இவருக்கு செல்லம் நகர் பகுதியைச் சேர்ந்த சின்ன மருது பாண்டியன் என்பவருக்கும் 2011ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
திருமணமான ஒரு மாதத்தில், சின்ன மருது பாண்டியனின் தாயார் மாரியம்மாள் 20 பவுன் நகையும், ஒரு லட்சம் ரூபாய் பணத்தையும் பிருந்தாவிடம் வரதட்சணையாகக் கேட்டு துன்புறுத்தத் தொடங்கியதாக அறிய முடிகிறது.
இது குறித்து கேள்வியுற்ற பிருந்தாவின் பெற்றோர், தங்களது சம்பந்தி மாரியம்மாளிடம் சென்று நேரில் கேட்டுள்ளனர்.
அப்போது தனது மகன் வெளிநாட்டில் வேலை பார்த்தவர் என்பதால் அவருக்கு வரதட்ணையாக கூடுதலாக நகை, பணம் வழங்க வேண்டும் என இரக்கமில்லாமல் கேட்டுள்ளார்.
தற்போதய பொருளாதார நெருக்கடியில் முடியாது என்றும் எதிர்காலத்தில் தருவதாகவும் பிருந்தாவின் பெற்றோர் சமாதானம் பேசியுள்ளனர்.
இதனிடையே, பிருந்தா தனது தலை பிரசவத்திற்கு பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
இந்த நேரத்தில், தனது மகன் சின்ன மருதுபாண்டியனுக்கு சட்டத்திற்கு புறம்பாக வேறொரு பெண்ணுடன் திருமணத்தை அவரது தாயார் மாரியம்மாள் நடத்தியதாக தெரிகிறது.
இந்த தகவலையறிந்த பிருந்தாவின் பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
சின்ன மருது பாண்டியன் மலேசியாவில் வேலை பார்த்தபோது, அங்கு ஏற்கெனவே ஒரு பெண்ணை திருமணம் செய்து ஏமாற்றியதும் பிருந்தா மற்றும் உறவினர்களுக்கு தெரியவந்தது.
இந்நிலையில், திருமணமானதை மறைத்ததோடு மட்டுமல்லாமல் தன்னுடன் வாழும்போதே வேறொரு பெண்ணை சட்டத்திற்கு புறம்பாக திருமணம் செய்து தனது கணவர் சின்ன மருதுபாண்டியன் மீதும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது தாயார் மாரியம்மாள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பிருந்தா மனு ஒன்றை அளித்துள்ளார்.