ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள தோளூர் தெற்குப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சுரேஷ் - சோனியா (28) தம்பதியினர். சோனியாவிற்கு முதலாவதாக ஆண் குழந்தை அறுவை சிகிச்சை மூலம் பிறந்துள்ளது. இவர் தனது இரண்டாவது குழந்தையின் பிரசவத்திற்காக ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த 2ஆம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் அனுமதிக்கப்பட்டது முதலே அவருக்கு தொடர்ந்து வயிற்று வலி இருந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து அங்கு பணியில் இருந்த மருத்துவரிடமும், செவிலியர்களிடமும் பலமுறைக் கூறியும் அவர்கள் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர். இந்நிலையில், சோனியாவிற்கு நேற்று நள்ளிரவில் பிரசவ வலி அதிகரித்துள்ளது.
இதையடுத்து, அங்கு பணியிலிருந்த செவிலியர்களிடமும், மருத்துவரிடமும் சோனியாவின் உறவினர்கள் பலமுறை கூறியுள்ளனர். ஆனால் அவர்கள் அலட்சியப் போக்குடன் நடந்துகொண்டதாக தெரிகிறது. மேலும், நீண்ட நேரத்திற்கு பிறகு அவருக்கு பிரசவம் பார்க்கப்பட்டது. அப்போது, குழந்தை இறந்த நிலையில் பிறந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு மருத்துவர்கள், செவிலியர்களின் அலட்சியப்போக்குதான் காரணம் என உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் கடும் வாக்குவாதத்திலும் அவர்கள் ஈடுபட்டனர். இதனால் மருத்துவமனையில் பரபரப்பு நிலவியது.
இது குறித்து ராமநாதபுரம் மருத்துவக்கல்லூரி டீன் அல்லியிடம் கேட்டபோது, குழந்தை இறந்து பிறந்தது தொடர்பாக நடத்தப்படும் விசாரணையில் மருத்துவமனை ஊழியர்கள் அலட்சியமாகச் செயல்பட்டது தெரியவந்தால் மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனக் கூறினார்.