புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே திருமண விழாவில் பங்கேற்ற பாஜக மாநில துணைத் தலைவர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "கடந்த நாடாளுமன்றத் தேர்தலை போல் இல்லாமல் 2021ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல் முற்றிலும் மாறுபட்ட தேர்தலாக இருக்கும்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி மோசமான தோல்வியை சந்தித்தது. ஆனால், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி அதிக இடங்களை வென்று தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்கும்.
பாஜக இந்திமொழியை தமிழ்நாட்டில் திணிக்க வேண்டும் என ஒருபோதும் எண்ணியது இல்லை. அதுபோல் நாங்கள் தமிழ் மொழிக்கு எதிரானவர்களும் இல்லை. எங்கள் தமிழ்நாட்டு நிர்வாகிகள் யாரும் இந்தியில் பேசுவது கிடையாது.
ஆனால் இந்தியை எதிர்க்கும் திமுகவினர் தான் இந்தியில் பேசுகிறார்கள். இந்தியை கற்றுக் கொள்ளவும் செய்கிறார்கள். புதிய தேசியக் கல்வி கொள்கையினை நாங்கள் வரவேற்கிறோம். கடந்த 34 ஆண்டு காலமாக மாற்றப்படாத கல்விக் கொள்கையானது, தற்போது மாற்றப்படுவதால் தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு எந்தவிதத்திலும் பாதிப்பு ஏற்படாது" என அவர் கூறினார்.