இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பின்படி இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சமயக் கொள்கைகளைப் பரப்பிட 'திருக்கோயில் ' எனும் பெயரில் ரூ .8.77 கோடி மதிப்பில் தொலைக்காட்சி தொடங்குவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக திருக்கோயில் தொலைக்காட்சி ஒளிப்பரப்புக்கான முன்னேற்பாடுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து திருக்கோயில்களில் நடைபெறும் ஒவ்வொரு முக்கியமான நிகழ்வுகளும் ஒளிப்பதிவு செய்யப்பட்டு தேவையான எடிட்டிங், வர்ணணனைகள் இணைக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளன.
தமிழ்நாடு திருக்கோயில் நிகழ்வுகளை ஆவணப்படுத்திட அறிவுரை வழங்கப்பட்டிருந்தது. அதன்படி, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள முதுநிலைத் திருக்கோயில்களின் காணொலி ஆவணப்படங்கள் தயார் செய்திட அறிவுறுத்தப்பட்டு சில திருக்கோயில்களின் காணொலி ஆவணப்படங்கள் ஆணையர் அலுவலகத்தில் பெறப்பட்டுள்ளது.
ஒளிப்பதிவு செய்யப்பட்ட காணொலி ஆவணப்படங்கள் ஆய்வு செய்யப்பட்டதில் ஒரு சில திருக்கோயில்களின் ஆவணப்படங்கள் மட்டுமே முழுமையாக உள்ளன.
தற்பொழுது சிறப்பான காணொலி ஒளிப்பதிவுகளைக் கீழ்க்காணும் வழிகாட்டுதல்களை பின்பற்றி தயார் செய்திட அறிவுறுத்தப்படுகிறது.
திருக்கோயில் தொலைக்காட்சியில் நாள் முழுவதும் ஒளிபரப்பு செய்திட அதிகளவு படக்காட்சிகள் தேவைப்படுவதால் ஒவ்வொரு திருக்கோயில்களிலும் நடைபெறும் பிரசித்தி பெற்ற அனைத்து நிகழ்ச்சிகளையும் (4K Resolution Camera) உள்ள வீடியோகிராபர்கள் மூலம் ஒளிப்பதிவு செய்து அதற்கான குறிப்புகளுடன் ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்திடவும் இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது.
காணொலி ஆவணப்படங்கள், திருக்கோயில் நிகழ்வுகளை ஒளிப்பதிவு செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள்
1. திருக்கோயில் வளாகம் , முகப்பு , விமானங்கள் , கோபுரங்கள் , திருக்கோயிலுக்கான பெயர் தெரியும் வகையில் தொடக்கம் பதிவுகள் இடம்பெற வேண்டும்.
2. திருக்கோயில் அமைவிட விவரங்கள் தெளிவாக இடம்பெற வேண்டும்.
3. திருக்கோயில் தல வரலாறு ( பின்னணி வர்ணனை, தேவையான காட்சிகளுடன் ).
4. திருக்கோயிலில் நடைபெறும் திருவிழாக்கள் (பின்னணியில் சம்பந்தப்பட்ட திருக்கோயில் தொடர்பான பாடல்கள் இசையுடன்).
5. திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் நெகிழ்ச்சியான அனுபவங்கள் மிகவும் சுருக்கமாக பதிவு செய்ய வேண்டும். (30 நொடிகள்)
6. திருக்கோயிலில் பக்தர்களுக்கான வசதிகள் விபரங்கள் இட பற வேண்டும்.
7. திருக்கோயிலில் நடைபெறும் சிறப்பு பூஜைகள், நடைபெறும் நேரம் தங்க ரதம் போன்றவற்றிற்கான கட்டண விபரங்கள் குறிப்பிட வேண்டும்.
8. திருக்கோயிலின் மண்டபங்கள் குறித்து தகவல்கள் தெரிவிக்கும் பொழுது மண்டபத்திற்கான சரியான பெயரை மட்டுமே குறிப்பிட வேண்டும். குறிப்பாக ஆர்சிசி மண்டபம், ஓட்டு மண்டபம் என கட்டிடத்தின் தன்மையை தெரிவிக்கக் கூடாது.
9. ஒளிப்பதிவில் திருக்கோயிலில் பணியாற்றும் அர்ச்சகர்கள், பணியாளர்கள் காட்சியில் வரும்போது அங்கீகரிப்பட்ட ஆடைகளை மிகவும் தூய்மையாக அணிந்திருக்க வேண்டும்.
10. ஒளிப்பதிவு செய்யப்படும் கோயில் வளாகங்கள் தூய்மையாக பராமரிக்கப்பட வேண்டும். ஒரே நிகழ்ச்சிகள் திரும்ப , திரும்ப இடம் பெறக்கூடாது.
11. ஒளிப்பதிவுக் காட்சிகளில் கோயில் பணியாளர்கள் இடம்பெறுவது முற்றிலும் தவிர்த்தல் நலம்.
12. ஒளிப்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்ட சுவாமி உருவங்களை காண்பிக்கும் பொழுது அவற்றின் முழுமையான உருவங்களை ஒளிப்பதிவு செய்ய வேண்டும். (கால், கை, தலை என தனித்தனியாக இல்லாமல் முழுமையான தோற்றம் ஒளிப்பதிவு செய்ய வேண்டும்) சுவாமி உருவங்களை தூரத்தில் இருந்து நெருக்கமான காட்சிகளாக மிகவும் அழகாக காண்பிக்க வேண்டும்.
13. தலச்சிறப்பைச் சொல்லும்போதும் ஓதுவார்கள் பாடும் போதும் அவர்களது உருவத்தை கீழ் ஓரத்தில் அஞ்சல்வில்லை அளவில் காண்பித்தால் போதும். அந்த நேரத்தில் சிற்பங்கள் அல்லது திருக்கோயிலின் சிறப்பான பகுதிகளைக் காட்சிப்படுத்த ஆயத்தமாக இருக்க வேண்டும். என இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஒரு லட்சத்து 14 ஆயிரத்தைத் தாண்டியது கரோனா பாதிப்பு