தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பார் ஊராட்சியில் உள்ள தெற்கு தெரு பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
அங்கு நேற்று (நவ. 18) நள்ளிரவு பெய்த மழையின் காரணமாக அப்பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் போல் மழை நீர் சூழ்ந்துள்ளது.
இதன் காரணமாக அங்குள்ள பொதுமக்களின் இயல்புவாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் உள்ள சாலைகளில் தேங்கும் மழைநீரால், வாகன ஓட்டுநர்கள், பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
இது தொடர்பாக பேசிய அப்பகுதி மக்கள், "மழை நீர் சேகரிக்கும் திட்டம், டெங்கு குறித்து விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்துவரும் மாவட்ட நிர்வாகம், குடியிருப்பு பகுதிகளில், மழை நீர் தேங்குவதை தடுக்க, நடவடிக்கை எடுக்காமல் உள்ளது.
தற்போது வரை ஊராட்சி நிர்வாகத்தினரோ உள்ளாட்சி அலுவலர்களளோ யாரும் எங்களை வந்து சந்திக்கவில்லை.
ஆண்டுதோறும் மழை காலங்களில் மக்கள் இதே பிரச்னையை அனுபவித்துவருகிறோம். இந்நிலையை மாற்ற உடனடியாக அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்" எனக் கோரிக்கைவைத்தனர்.
அதேபோல, விளாத்திகுளம் அருகே உள்ள வேலாயுதபுரம் பகுதியில் அடித்த புயல் மழையால் மின் கம்பங்கள் சரிந்து விழுந்துள்ளன. இதன் காரணமாக அங்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
கனமழையின் காரணமாக பல்வேறு இடங்களில் மரங்கள் சரிந்து விழுந்துள்ளன. இதனால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.