ஸ்ரீவில்லிபுத்தூர் புனித இருதய பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் புனித இருதய கான்வென்ட் உயர் நிலைப்பள்ளிகளின் தாளாளர்கள் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல்செய்திருந்தனர்.
அதில், "மகாத்மா காந்தியின் நினைவுநாளான ஜனவரி 30ஆம் தேதி அன்று தமிழக மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பு சார்பில் நடைபெற்ற குடியுரிமை சட்டத்திற்கு எதிரான மனிதச்சங்கிலி போராட்டத்தில் பங்கேற்ற எங்கள் பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
குடியுரிமை சட்டத்திற்கு எதிரான மனிதச் சங்கிலி போராட்டத்திற்கும் பள்ளிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இருப்பினும் சில அரசியல் கட்சிகள், மத அமைப்புகளின் தூண்டுதலால் கல்வித் துறை அலுவலர்கள் பள்ளிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினர். அந்த நோட்டீசுக்கு உரிய விளக்கம் அளிக்கப்பட்டது. இருப்பினும் அதையேற்காமல் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர். அந்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டும்" எனக் கோரியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை மதுரைக்கிளை நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் தலைமையிலான அமர்வுக்கு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுவை ஆராய்ந்த நீதிமன்றம், "குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற மனிதச்சங்கிலி போராட்டத்தில் பங்கேற்ற அனைத்து ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு பள்ளி நிர்வாகம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்ப வேண்டும்.
அதற்கு ஆசிரியர்கள் அளிக்கும் பதிலை தொகுத்து ஒருங்கிணைந்த அறிக்கை ஒன்றை தயாரித்து அலுவலர்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த நடைமுறையை 4 வாரத்தில் பள்ளி நிர்வாகம் முடிக்க வேண்டும். பள்ளி நிர்வாகம் அனுப்பிவைக்கும் ஒருங்கிணைந்த அறிக்கை அடிப்படையில் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாமா, கைவிடலாமா? என்பது குறித்து கல்வித் துறை அலுவலர்கள் முடிவுசெய்ய வேண்டும்.
அதுவரை கல்வித் துறை அலுவலர்கள் தற்போது அனுப்பியுள்ள நடவடிக்கை கடிதத்தை நீதிமன்றம் நிறுத்திவைக்கிறது" என உத்தரவில் கூறப்பட்டுள்ளது.