தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர் சுதாகரன் தலைமை வகித்த இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் ஊடகங்களிடையே பேசிய சுதாகரன், "மருத்துவப் படிப்பில் 7.5% அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு செய்தமைக்கு தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு 2.5% இட ஒதுக்கீடு செய்து மொத்தத்தில் 10% இட ஒதுக்கீடு உருவாக்கிட வேண்டும்.
மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஆசிரியர் பணியிடங்களுக்கு வயது வரம்பின்றி பணி ஆணை வழங்கிட வேண்டும்.
ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களுக்குப் போராட்ட காலத்திற்கான ஊதியம் வழங்கிட வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாநிலப் பொருளாளர் கதிரவன், மாநிலத் துணைத் தலைவர் நீலகண்டன், அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் இணைப் பொதுச்செயலாளர் ரங்கராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.