நத்தம் தாலுகா செந்துறை அருகேயுள்ள மாமரத்துபட்டியிலிருந்து அய்யலூர் செல்லும் சாலை முறையான பராமரிப்பு இல்லாததால் 5 ஆண்டுகளாக குண்டும், குழியுமாக இருந்து வருகிறது.
இச்சாலையை சீரமைத்துத் தரும்படி அப்பகுதி மக்கள் பொதுப்பணித்துறை அலுவலர்களிடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், தற்போது பொழிந்துவரும் தொடர் மழையின் காரணமாக சாலை மிகவும் பழுதடைந்து சேறும், சகதியுமாய் காட்சியளிக்கிறது.
இதனால் இந்த முக்கிய சாலையில் பயணப்படும் விவசாயிகள், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்த நிலையில், மாமரத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் சாலையில் இறங்கி சேற்றில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்துடன், சாலையை சீரமைத்துத் தராத நிர்வாகத்தையும், அலுவலர்களையும் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பி, தங்களின் எதிர்ப்பை பதிவுசெய்தனர்