குமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவரது மகள் தஸ்லின் ஸ்மைலி, இவர் தனது தாயார் வனஜாவுடன் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது, "நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள நீட் பயிற்சி மையத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு நீட் நுழைவுத் தேர்விற்கான பயிற்சியில் சேர்ந்தேன். இதற்கு கட்டணமாக ரூ.30 ஆயிரம் என்னிடமிருந்து வசூலித்தார்கள். இந்நிலையில் நீட் தேர்வு தொடங்குவதற்கு சில நாட்கள் முன்புவரை தேர்விற்கான நுழைவுச் சீட்டு வழங்காமல் ஏமாற்றி வந்தனர். நானும் எனது பெற்றோரும் பலமுறை கேட்டும் ஹால் டிக்கெட் வழங்காமல் எங்களை அலைக்கழித்தனர்.
இதனால் சந்தேகம் அடைந்து உத்தரப்பிரதேசத்தில் உள்ள உயர் கல்வி தேசிய தேர்வு முகமையான எம்.எச்.ஆர்.டி. மூலம் விசாரித்ததில் நீட் தேர்விற்கான கட்டணம் சம்பந்தப்பட்ட பயிற்சி மையம் மூலம் இதுவரை செலுத்தப்படவில்லை என்பது தெரியவந்தது.
இதனால் நீட் தேர்வு எழுத முடியாமல் ஏமாற்றமடைந்து, பயிற்சி மையத்தில் கேட்டதற்கு அடுத்த ஆண்டு நீட் தேர்வை எழுதலாம் என அலட்சியமாகப் பதிலளிக்கின்றனர். இதனால் பல நாட்கள் இரவு பகலராக நீட் தேர்விற்கு பயிற்சி எடுத்த நான் மன உளைச்சலடைந்து மிகவும் பாதிப்படைந்துள்ளேன்.
எனவே, இதுபோன்று என்னைப் போன்ற எந்த மாணவ, மாணவியும் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யும் வகையில் சம்பந்தப்பட்ட நீட் பயிற்சி மையம் மீது நடவடிக்கை எடுப்பதுடன், குமரி மாவட்டத்தில் உள்ள நீட் பயிற்சி மையங்களை முறைப்படுத்த வேண்டும்"என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.