இந்தியாவின் அனைத்து மாநில பொதுத்துறை யோகா மற்றும் இயற்கை மருத்துவர்களுக்கான மூன்று நாள் இணையவழி புத்தாக்க பயிற்சி முகாமை மத்திய ஆயுஷ் அமைச்சகம் நடத்தியது.
நாடு முழுவதிலுமிருந்து ஏறத்தாழ 400 மருத்துவர்கள் பங்கேற்ற இம்முகாமில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 37 மருத்துவர்கள் கலந்துகொண்டனர்.
முழுவதும் இந்தி மொழியிலேயே நடத்தப்பட்ட வகுப்புகளின் இறுதிநாளில் மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் செயலர் வைத்ய ராஜேஷ் கொடேச்சா சிறப்பு பயிற்சியை வழங்கி உள்ளார்.
அவரும் தனது பயிற்சியை இந்தியில் மட்டுமே அளித்ததை அடுத்து, பயிற்சி பட்டறையில் கலந்துகொண்ட மருத்துவர்கள் பயிற்சியை ஆங்கிலத்தில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கைவிடுத்துள்ளனர்.
அதற்கு ஆயுஷ் செயலர், தன்னால் இந்தியில் மட்டும்தான் வகுப்பு நடத்த முடியும் என்றும் இந்தி புரியாதவர்கள் வகுப்புகளைவிட்டு வெளியேறலாம் என்றும் ஆணவத்துடன் கூறியுள்ளார்.
மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சக செயலர் கொடேச்சாவுக்கு தமிழ்நாடு அரசியல் தலைவர்கள், மொழியுரிமை பாதுகாப்பு அமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.
அந்த வகையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தன்னுடைய எதிர்ப்பை பதிவுசெய்துள்ளார்.
இது குறித்து தன்னுடைய அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், "ஆயுஷ் அமைச்சக அதிகாரிகள் தமிழ் புரியாமல் எப்படி எங்கள் மருத்துவத்தைப் புரிந்துகொள்வர் என்ற கேள்வி எழுப்பாதது எம் மருத்துவர்களின் பெருந்தன்மை.
அனைவருக்கும் புரியும் மொழியில் இயங்க வேண்டியது அரசின் கடமை. இது இந்தி அரசல்ல; இந்திய அரசு என்பதை மறந்துவிட வேண்டாம்.வாழிய பாரத மணித்திருநாடு" எனக் கூறியுள்ளார்.