இது தொடர்பாக அவர் இன்று (நவ.20) வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரசுப் பள்ளிகளில் பயின்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று 7.5 விழுக்காடு இடஒதுக்கீட்டில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடஒதுக்கீட்டை பெற்ற மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் முழுவதையும் அரசே ஏற்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
மத்தியில் ஆளும் பாஜக அரசு மாநில உரிமையை பறித்து கடந்த 2017ஆம் ஆண்டு முதல் மருத்துவ படிப்பிற்காக அகில இந்திய அளவில் நீட் எனும் தேர்வை நடத்துகிறது. இத்தேர்வால் தமிழ்நாட்டின் கிராமப்புற, ஏழை, எளிய அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவு சிதைக்கப்பட்டது. இதுவரை இத்தேர்வால் 18 மாணவர்கள் தற்கொலைக்கு தள்ளப்பட்டனர்.
இந்நிலையில், தமிழ்நாட்டின் அரசுப்பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் மருத்துவப்படிப்பில் 7.5 விழுக்காடு உள் இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. அந்த இடஒதுக்கீட்டின் படி எம்பிபிஎஸ் 313, பிடிஎஸ்-92, 405 சீட் வரை கிடைத்துள்ளது. இவர்களில் பல மாணவர்களுக்கு தனியார் கல்லூரியில் தற்போது இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. தனியார் கல்லூரியில் ஒதுக்கப்பட்டால் பல லட்சம் ரூபாய் கல்விக்கட்டணம் கட்ட வேண்டிய நிலை உள்ளது.
போராடி அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு பெற்றும் கட்டணம் கட்ட முடியாமல் மாணவர்கள் சேர்க்கை கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு பள்ளி மாணவர்கள் பொருளாதார ரீதியில் மிகவும் அடித்தட்டு குடும்பங்களை சார்ந்தவர்கள் என்பது அறிந்ததே.
ஆகவே அரசுப்பள்ளியில் பயின்று 7.5 விழுக்காடு இடஒதுக்கீட்டில் தனியார் கல்லூரியில் இடம் கிடைத்துள்ள அத்தனை மாணவர்களுக்கான கல்விக்கட்டணம் முழுவதையும் அரசே ஏற்க வேண்டுமெனவும், வரும் காலங்களில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அரசு கல்லூரியிலேயே இடம் ஒதுக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறோம்.
மேலும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தை அரசே ஏற்று நடத்தி வருகிறது. ஆனால் இப்பல்கலைக்கழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரியில் தனியார் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கட்டணமே வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்த கல்லூரியை அரசே ஏற்று நடத்தும் பட்சத்தில் அரசுக்கல்லூரிகளின் கட்டணமே இக்கல்லூரியிலும் தீர்மானக்கப்பட வேண்டுமென்பதை அரசு உறுதி செய்ய வேண்டுமென தமிழ்நாடு அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது" என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.