திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் கருப்பு முருகானந்தம் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முருகானந்தம், " விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஒன்றரை லட்சம் விநாயகர் சிலைகள் வைத்து வழிபட உள்ளதாக அறிவித்திருந்தது. ஆனால், தமிழ்நாடு அரசு சிலைகள் வைத்து வழிபடக்கூடாது என தடைப்போட்டுள்ளது.
பல இடங்களில் சிலைகளை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து இந்த நடவடிக்கையை அரசு மேற்கொண்டு வருகிறது. இது சட்டவிரோதமானது கண்டனத்துக்குரியதாகும்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் 28ஆவது ஆண்டாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் ஒவ்வொரு சிலைக்கும் இரண்டு நபர் மட்டுமே எடுத்து சென்று ஆற்றில் கரைப்பதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு காவல் துறை அனுமதிக்க வேண்டும் இல்லையெனில் வரும் 24ஆம் தேதி முத்துப்பேட்டை சுற்றுவட்டார 19 கிராமங்களில் உள்ள வீடுகளில் பொதுமக்கள் வழிபட்ட சிலைகளை, வீடுகளுக்கு தலா இரண்டு பேர் என நான்காயிரம் நபர்களை கொண்டு ஊர்வலமாக எடுத்துச் சென்று ஆற்றில் கரைப்போம். இதற்கும் காவல் துறை அனுமதி மறுத்தால் நீதிமன்ற உத்தரவை மீறுவதைத் தவிர வேறுவழியில்லை.
ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்திற்கு உட்பட்ட ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுவான இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து 144 தடை உத்தரவுக்கு ஏற்ப சிலைக்கு ஐந்து நபர்கள் மட்டுமே என்கிற முறையில் சுமார் 25 ஆயிரம் நபர்களைக் கொண்டு வழிபாடு செய்து, பின்னர் சிலைகளை ஆற்றில் கரைக்க முடிவு செய்துள்ளோம்" என தெரிவித்தார்.