ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்துள்ள விஐயமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி, ராஜம்மாள் தம்பதியின் மகன் அருள்பிரகாஷ். இவர் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தைச் சேர்ந்த குணசுந்தரியை காதலித்து கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துகொண்டார்.
திருமணமான சில நாட்களிலேயே அருள்பிரகாஷ், குணசுந்தரி இருவரும் தனியாக வசித்துவந்தனர். இந்தநிலையில் முத்துசாமியின் வேலை காரணமாக அடிக்கடி வெளியே வசிக்கும்நிலை ஏற்பட்டது. இதனையடுத்து அருள்பிரகாஷ் தனது அம்மாவை தன்னுடன் தங்கவைத்து பார்த்து வந்துள்ளார்.
மாமியார் ராஜம்மாளுக்கும், மருமகள் குணசுந்தரிக்கும் சமைப்பது முதல் வீட்டை சுத்தம் செய்வதுவரை அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே நேற்று முன்தினம் வீடு சுத்தம் செய்வதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் குணசுந்தரி வீட்டின் அறையில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இந்த சம்பவம் குறித்து குணசுந்தரியின் வீட்டார் அளித்த புகாரின் பேரில் பெருந்துறை காவல் துறை வழக்குப்பதிவு செய்து மாமியார் ராஜம்மாள், கணவர் அருள்பிரகாஷ் இருவரையும் கைது செய்தனர். குணசுந்தரி, அருள்பிரகாஷ் இருவருக்கும் ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: முதியவரை குறிவைக்கும் கொலையாளியின் அடுத்த காணொலியால் பரபரப்பு...!