கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் கூட்டரங்கத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆட்சியர் அன்பழகன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில், கரூர் மாவட்டத்தில் வெள்ளம் ஏற்படக்கூடிய தாழ்வான பகுதிகள் ஓடைகள், குளம், கண்மாய்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி அவற்றின் கரைகளை பலப்படுத்தவும், பழுது ஏற்பட்டுள்ள மதகுகளை பராமரிப்பு செய்து கொள்ளுதல், வெள்ள நீர் பாதுகாப்பாக வடிகால் மூலம் வெளியேற்ற அமைப்புகளை உருவாக்குதல், வெள்ளத்தடுப்புக்காக மணல் மூட்டைகளை தேவையான அளவுக்கு வைத்துக் கொள்ளுதல், பேரிடர் காலங்களில் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் உணவுப்பொருள்கள் உள்பட அத்தியவாசியப் பொருள்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.
மேலும் வெள்ளம் ஏற்படக்கூடிய பகுதிகளில் உள்ள பொதுமக்களை வெளியேற்றி மேடான பகுதிகளில் பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு இடங்களை தேர்வு செய்து வைத்தல் உள்ளிட்ட பணிகளை சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் முழுவீச்சில் செய்து முடித்திட வேண்டும் என்று ஆட்சியர் உத்திரவிட்டார்.
மழை வெள்ள காலங்களில் உதவி தேவைப்படுவோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கிவரும் பேரிடர் மேலண்மை அவசர உதவி கட்டுப்பாட்டு அறைக்கு 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு உதவி மற்றும் தகவல்களை பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், குளித்தலை சார் ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரகுமான், மேலாண்மை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி துறை, பொதுப்பணித்துறை, நகராட்சி நிர்வாகம் உள்பட அனைத்துத் துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.