கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், அரங்கங்கள், அருங்காட்சியகங்கள் உள்ளிட்டவை ஏழு மாதங்களாக மூடப்பட்டிருந்தன. மத்திய அரசு ஊரடங்கில் சில தளர்வுகளை அவ்வப்போது அமல்படுத்திவருகிறது. அதன் ஒரு பகுதியாக, சுற்றுலாத் தளங்கள் நவம்பர் 10ஆம் தேதி முதல் செயல்படலாம் எனத் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து, தென்காசி மாவட்டத்தில் பிரதானமானதும், தென் மாவட்டத்தில் உள்ள சர்வதேச சுற்றுலாத் தளமான தென்காசி குற்றால அருவியில் சுற்றுலா சேவை தொடங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டு வந்தது. இருப்பினும், கரோனா பரவலை காரணம் காட்டி குற்றால அருவியில் குளிப்பதற்கு தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுவருவதாக அறியமுடிகிறது.
சீசன் காலகட்டமான தற்போது சுற்றுலாப் பயணிகள் வருகையின்றி, அதனை நம்பியுள்ள சிறு குறு வியாபாரிகள், உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, குற்றால அருவியில் குளிப்பதற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வலியுறுத்தி திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்காசி திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளர் சிவ பத்மநாதன் தலைமையில், அதன் கூட்டணி கட்சிகள் மாவட்ட ஆட்சியர் சமீரனை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை கையளித்தனர்.
அந்த மனுவில், "கரோனா வைரஸ் பெருந்தொற்றுநோயின் பரவல் காரணமாக கடந்த ஒன்பது மாதங்களாக நீட்டிக்கப்பட்டு வரும் தடை உத்தரவில் தளர்வுகள் அடிப்படையில் குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் குளிப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும்.
மேலும், தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக வழிப்பாதைகள் அடைக்கப்பட்டுள்ளன. அதனை அப்புறப்படுத்தி, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.