இது தொடர்பாக அவர் இன்று (நவம்பர் 3) வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டின் அடையாளமாக தனிக்கொடி பறக்க விட்டதற்காக, பொழிலன் உள்ளிட்ட சிலரை கைது செய்து, நாட்டுக்கு எதிரி என்ற பிரிவுகளின் கீழ் வழக்குகள் புனைந்து, சிறையில் அடைத்திருப்பது, இந்திய அரசு அமைப்புச் சட்ட நெறிமுறைகளுக்கு எதிரானது. இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்.
இந்தியா என்பது ஒரு நாடு அல்ல; இது பல நாடுகள் சேர்ந்த ஒன்றியம். எனவேதான் அரசு அமைப்புச் சட்டம் யூனியன் ஆப் இந்தியா என்று குறிப்பிடுகின்றது. அதன் பொருள் நாடுகளின் ஒன்றியம் என்பதுதான். இந்தக் கருத்தை இந்திய நாடாளுமன்றத்தில் பலமுறை வலியுறுத்தி பேசி இருக்கிறேன். புத்தகமாகவும் அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறேன்.
அமெரிக்கா என்பது ஒரு நாடு அல்ல. அது 50 மாநிலங்கள் சேர்ந்த ஒரு ஒன்றியம். அங்கே ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனிக்கொடி, தனி அரசு முத்திரை இருக்கிறது. தனித்தனிச் சட்டங்களும் உள்ளன. தமிழ்நாட்டில் பாதி அளவு கூட இல்லாத சுவிட்சர்லாந்து நாட்டில், கேண்டன்கள் எனப்படும் 26 தனித்தனி ஒன்றியங்கள் உள்ளன. அந்த நாட்டின் அரசு அமைப்புச் சட்டத்தை திருத்துவதாக இருந்தால், அந்த 26 ஒன்றியச் சட்டப்பேரவைகளும் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
இது போல இன்னும் எண்ணற்ற எத்தனையோ நாடுகள் கூட்டு ஆட்சி அமைப்பைக் கொண்டு இருக்கின்றன. இந்தியாவும் அத்தகைய கூட்டு ஆட்சி அமைப்பு ஒன்றியம்தான். இந்திய அரசு அமைப்புச் சட்டம் காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கியிருந்த, தனிக் கொடி ஏற்றும் உரிமையை, பாஜக அரசு பறித்து விட்டது.
ஐரோப்பாவில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனி முத்திரை உள்ளது; ஒவ்வொரு கிராமத்திற்கும் தனிக்கொடி உள்ளது. கல்லறைகளில் கூட தனித் தனி முத்திரைகள் பதிக்கப்படுகின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடக மாநிலம் தனக்கென ஒரு தனிக் கொடியை உருவாக்கியது. அதற்கு அம்மாநில சட்டப்பேரவை ஒப்புதல் அளித்திருக்கிறது.
அதுபோல, தமிழ்நாட்டிற்கென தனிக்கொடி அமைப்பதில் எந்த தவறும் இல்லை; அதைத் தடுக்கும் அதிகாரம் இந்திய ஒன்றிய அரசுக்கு இல்லை. நாகாலாந்து மாநிலம் தனிக்கொடி கேட்கின்றது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் தனித் தனி முத்திரை இருக்கிறது. அதுபோல தனிக்கொடியும் வேண்டும்.
கருத்து உரிமையை நசுக்குகின்ற வகையில் அடக்கு முறையை கையாள்வதை மத்திய - மாநில அரசுகள் கைவிட வேண்டும். பொழிலன் உள்ளிட்ட தோழர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.