தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்த பணிகளைத் தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில், கோவையில் வரைவு வாக்காளர் பட்டியலை அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்பு இன்று(நவ-16) மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி வெளியிட்டார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் கூறிய மாவட்ட ஆட்சியர்; இன்று(நவ-16) வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி கோவை மாவட்டத்தில் 29 லட்சத்து 70 ஆயிரத்து 733 வாக்காளர்கள் உள்ளனர்.இதில் ஆண்கள் 14 லட்சத்து 68 ஆயிரத்து 722 பேர். பெண்கள் 15 லட்சத்து இரண்டாயிரத்து 142 பேர். மூன்றாம் பாலினத்தவர் 369 பேர். இதில் 15 ஆயிரத்து 165 பேர் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
வருகின்ற டிசம்பர் 31ஆம் தேதியின் வரை அல்லது தேதியின் முன்பு வாக்காளர் பட்டியலில் பெயர்கள் சேர்ப்பு திருத்தம் முகவரி மாற்றம் ஆகியவற்றுக்கு விண்ணப்பங்களை அளிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதற்கான விண்ணப்பங்கள் வருகின்ற 16ஆம் தேதி முதல் டிசம்பர் 15ஆம் தேதி வரை அனைத்து வேலை நாட்களிலும் வாக்குப் பதிவு மையங்கள் கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், நவம்பர் 21, 22 மற்றும் டிசம்பர் 12, 13 ஆகிய நான்கு நாட்களுக்கும் வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் மூலம் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்கம் மற்றும் திருத்தம் செய்வதற்கு இணையதளம் மூலமாகவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
www.nvsp.in என்ற இணைய முகவரியில் வாயிலாகவோ அல்லது voter helpline என்ற செயலி மூலமாகப் பொதுமக்கள் தங்களது விண்ணப்பங்களை அளிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் பொழுது திமுக சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் மற்றும் காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் உடனிருந்தனர்.