சென்னை அண்ணா நகர் (மேற்கு) அன்பு காலனி பகுதியில் இலங்கையைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாகத் தங்கி இருப்பதாக கியூ பிரிவு காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, அந்த வீட்டிற்கு திடீரென சென்ற கியூ பிரிவு காவலர்கள் சோதனையை மேற்கொண்டனர். அப்போது அங்கு தாஜூதின் (55), அவரது மனைவி ஆஷா ஆகியோர் தங்கி இருப்பது தெரியவந்தது.
தாஜூதீன் தனியார் காப்பீடு நிறுவனத்தில் பணிபுரிந்துவருவதும், ஆஷா சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞராகப் பணியாற்றிவருவதும் அவர்களிடம் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், விசாரணையில் தாஜூதின் இலங்கை நாட்டு பிரஜை என்பதும், இவர் 1989ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து இந்தியா வந்து திருநெல்வேலியில் வசித்துவந்ததும், அதன் பின்பு 1996ஆம் ஆண்டு முதல் சென்னையில் வெவ்வேறு இடங்களில் வசித்துவருவதும் தெரியவந்துள்ளது.
இவர் கடந்த ஒரு ஆண்டாக அண்ணாநகர் மேற்குப் பகுதியில் குடும்பத்தினருடன் வசித்துவந்துள்ளார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளதாகவும், அவர் பெங்களூருவில் வசித்துவருவதாகத் தெரியவந்துள்ளது.
தாஜூதனிடம் இந்தியாவில் வசிப்பதற்கு உரிய ஆவணங்கள் இல்லை என்றும், இலங்கை கடவுச்சீட்டு இல்லாமல் 31 ஆண்டுகள் வாழ்ந்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் போலி ஆவணங்களைக் கொண்டு மோசடி செய்தல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து தாஜூதீனை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞரான ஆஷாவிடம் உரிய ஆவணங்கள் இருந்த காரணத்தினால் காவல் துறையினர் அவரை விடுவித்தது குறிப்பிடத்தக்கது.
சட்டவிரோதமாக 31 ஆண்டுகள் தமிழ்நாட்டில் வசித்துவந்ததற்கான காரணம் என்ன? திடீரென தாஜூதீன் சிக்கியது தொடர்பான பின்னணியில் உள்ளவர்கள் பற்றியும் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.