திருப்பூர் மாநகர் வீரபாண்டி காவல் நிலைய ஆய்வாளராக மணிமொழி என்பவர் இருந்து வந்தார். திருமணமான இவர், கர்நாடகாவைச் சேர்ந்த பிரதீமா என்ற பெண்ணை கடந்த 2018ஆம் ஆண்டு இரண்டாவதாக திருமணம் செய்து, வெள்ளக்கோவில் பகுதியில் வசித்து வந்தார்.
இந்நிலையில், மணிமொழி கடந்த சில நாட்களாக வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்துக்கொண்டு பிரதீமாவை அடித்துத் துன்புறுத்துவதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, கடந்த 22-ம் தேதி திருப்பூர் காவல் ஆணையரகத்தில் மணிமொழி மீது, பிரதீமா புகார் அளித்தார். மேலும், வேறு பெண்களுடன் சேர்ந்து மணிமொழி எடுத்த புகைப்படங்களையும் காவல் ஆணையரகத்தில் கொடுத்துள்ளார்.
மாநகர காவல் ஆணையர் சஞ்சய் குமார், புகார் தொடர்பாக விசாரித்து அறிக்கை அளிக்குமாறு உதவி ஆணையர் தலைமையிலான அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த விசாரணை அறிக்கை உளவுத்துறை மூலம் தமிழ்நாடு அரசின் தலைமைக்கு சென்றுள்ளது. மேலும், காவல் ஆய்வாளர் மணிமொழியை மதுரை தெற்கு மண்டலத்திற்கு பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு தலைமைக் காவல் துறை உத்தரவிட்டுள்ளது.