கரோனா பெருந்தொற்று காரணமாக, தமிழ்நாடு முழுவதும் மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மதுப் பிரியர்கள் மது கிடைக்காமல் விரக்தியில் உள்ளனர். இந்த இக்கட்டான சூழலைப் பயன்படுத்தி, பலர் கள்ளச்சாராயம் காய்ச்சுவது, மது பாட்டில்களை திருடிப் பதுக்கி வைப்பது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், காங்கேயம் திருப்பூர் ரோட்டில் காந்திநகர் பகுதியில் பதுக்கல் மதுபானங்கள் விற்கப்படுவதாகக் காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில், அப்பகுதியில் காவல் துறையினர் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு வீட்டில் 24 பெட்டிகளில் ஆயிரத்து 154 மது பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டன.
இதனைப் பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்ட காங்கேயத்தைச் சேர்ந்த மகேஷ்குமார், திருமூர்த்தி, சரவணகுமார், நவநீதன், பால்ராஜ், ஜெகதீஷ் ஆகிய ஆறு பேரை காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட மதுபாட்டில்களில் மதிப்பு சுமார் இரண்டு லட்சம் ரூபாய் எனத் தெரிகிறது. மேலும், விற்பனைக்குப் பயன்படுத்தப்பட்ட மாருதி கார், வேன், மூன்று இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்டவர்களில் திருமூர்த்தி, கடை மேற்பார்வையாளராகவும், ஜெகதீஸ் விற்பனையாளராகவும், காங்கயம் அருகே உள்ள ஒரு டாஸ்மாக்கில் பணிபுரிந்து வருகின்றனர். வேலியே பயிரை மேய்த கதையாய் டாஸ்மாக் சரக்கை டாஸ்மாக் ஊழியர்களே கள்ளத்தனமாகப் பதுக்கி விற்பனை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் அவிநாசி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்க : 'பழக்கடைகளை சேதப்படுத்திய ஆணையர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?' - மனித உரிமை ஆணையம்