திருப்பூர்: இந்திய ரிசர்வ் வங்கியால் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்ட ஒரு நாணயம் செல்லுபடியாகாத ஒரு பகுதி தமிழ்நாட்டில் இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆம், நாடு முழுவதும் 100 கோடிக்கும் அதிகமான மக்கள் ஏற்றுக்கொண்டு புழக்கத்தில் இருக்கின்ற இந்த 10 ரூபாய் நாணயம், திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் செல்லாக்காசாகவே இருந்து வருகிறது.
திருப்பூர் மாவட்டங்களில் உள்ள தேநீர் கடைகள், மளிகை மற்றும் பல்வேறு கடைகளில் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதால், பொதுமக்கள் பலரும் பல ஆண்டுகாலமாக அவதியடைந்து வருகின்றனர். இந்திய ரிசர்வ் வங்கி 10 ரூபாய் நாணயத்தை 2005ஆம் ஆண்டு வெளியிட்டது.
அன்று முதல் இந்த நாணயம் புழக்கத்தில் இருந்து வருகிறது. இதுவரை ரிசர்வ் வங்கி 14 வகையான 10 ரூபாய் நாணயங்களை வெளியிட்டுள்ளது. ஒவ்வொன்றும் வெவ்வேறு வடிவத்தில் இருப்பதால், அதை புழங்குவதில் குழப்பம் இருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர். இதனால் திருப்பூர் மாவட்ட பகுதிகளில் 10 ரூபாய் நாணயத்தை கடை வியாபாரிகள், பேருந்து நடத்துநர்கள், சில்லறை வியாபாரிகள், பொதுமக்கள் என எவருமே வாங்க முன்வருவதில்லை.
இதனால் நாடு முழுவதும் செல்லுபடியாகும் 10 ரூபாய் நாணயம் திருப்பூர் மாவட்டத்தில் செல்லாக்காசாகி போய் இருக்கிறது. இந்நிலையில், இதை வாங்கி வைத்திருக்கக் கூடிய பொதுமக்கள், வியாபாரிகள் உள்ளிட்ட பலதரப்பட்டோர் அதை திருப்பி செலுத்த முடியாமல் முடக்கி வைத்திருப்பதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து திருப்பூர் மாவட்ட பேருந்து நடத்துநர்கள் கூறுகையில், "திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் இந்த 10 ரூபாய் நாணயங்களைக் கொடுத்தால் பொதுமக்கள் வாங்குவதில்லை. 10 ஆண்களில் ஓரிருவர் பெற்றுக்கொள்கிறார்கள். ஆனால் அதேசமயம் பெண்கள் என்றால் 10 பெண்களில் 10 பேருமே இதை வாங்க மறுக்கின்றனர்.
அந்த அளவுக்கு 10 ரூபாய் நாணயங்கள் செல்லாதவை என அவர்களின் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது. ஆனால் மற்ற மாவட்டங்களில் எல்லாம் எந்த ஒரு தடையும் இல்லாமல் இந்த நாணயங்கள் செல்லுபடியாகின்றன. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சிறிய வணிக நிறுவனங்கள் மற்றும் தேநீர் கடைகளில் இந்த நாணயங்கள் நிராகரிக்கப்படுவதால், பொதுமக்களும் 10 ரூபாய் நாணயங்களை வாங்க தயங்குகிறார்கள்" என்றார்.
இதுகுறித்து மக்களிடையே போதிய அளவு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” எனக் கூறினார். அதைத் தொடர்ந்து, சமூக ஆர்வலர்கள் கூறுகையில், "வியாபாரிகளும், பேருந்து நடத்துநர்களும் 10 ரூபாய் நாணயத்தை வாங்கினாலே இது முழு பயன்பாட்டுக்கு வந்துவிடும்.
அவர்கள் வாங்காததால் தான், பொதுமக்களும் தயங்குகிறார்கள். எனவே வியாபார நிறுவனங்கள், சிறு கடைகள், பேருந்துகளில் 10 ரூபாய் நாணயங்களை வாங்கச் செய்ய, மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்றனர். மேலும், ஹோட்டல் கடைக்காரர்கள் கூறுகையில், “10 ரூபாய் நாணயம் முழுமையாக புழங்கினால் எங்களுக்கும் சில்லறை பிரச்னை தீரும்.
நாங்கள் வாங்க தயாராக இருக்கிறோம். பொதுமக்கள் வாங்குவதற்கு அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” என்றனர். மேலும், 10 ரூபாய் நாணயம் இந்திய அரசின் ரிசர்வ் வங்கியால் அச்சிட்டு விநியோகிக்கப்பட்டு, நாடு முழுவதும் புழக்கத்தில் இருக்கும் நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் செல்லாக்காசாகவே இன்றளவும் உள்ளது. போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தினால் மட்டுமே அரசு அச்சிட்ட இந்த 10 ரூபாய் நாணயம் முழுமையான புழக்கத்திற்கு வரும்.
இதையும் படிங்க: தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை: மருத்துவமனை அறிக்கை வெளியீடு