திருப்பூர் மாவட்டத்தில் மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான பவர்கிரீட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் மூலம் உயரழுத்த மின் தொடரமைப்புப் பாதை கட்டுமானம் செய்ததில் தாராபுரம், பல்லடம், காங்கேயம் ஆகிய பகுதிகளில் நிலுவையிலுள்ள திட்டப் பணிகளைத் தொடர அனுமதி கோரி கடந்த 13ஆம் தேதி அந்நிறுவனம் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி கோரியிருந்தது.
இதன் அடிப்படையில் தற்சமயம் கரோனா பரவிவரும் நிலையில், தொழிலாளர்களுக்கிடையே தகுந்த இடைவெளி இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் கடந்த 16ஆம் தேதி பணிகளைத் தொடர திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஆட்சியர் விஜய கார்த்திகேயன் அனுமதி அளித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் பல்லடம் அருகே சுக்காம்பாளையம் பகுதியில் உயர்மின் கோபுரக் கம்பிகள் அமைக்கும் பணிக்கு பவர் கிரீட் நிறுவனத்தினர் வடமாநிலத் தொழிலாளர்களை லாரி, டிராக்டரில் ஒட்டுமொத்தமாக அழைத்துவந்து பணிசெய்ய பணிக்கப்பட்டனர். மேலும் தகுந்த இடைவெளியையும் பின்பற்றாமல் தொழிலாளர்களைப் பணிபுரியவைப்பதாக விவசாயிகள் தரப்பில் புகார் எழுந்தது.
இழப்பீட்டுத் தொகையைப் பெறுவதில் உள்ள முரண்பாடுகளைத் தீர்க்காமல் இவ்வாறு பணிகளைத் தொடர்வது சட்டவிரோதமானது எனவும் விவசாயிகள் ஆட்சியரிடம் புகார் செய்தனர். இதனையடுத்து தகுந்த இடைவெளியைப் பின்பற்றாமல் பணியாற்றிய பவர்கிரீட் நிறுவனத்திற்குக் கொடுத்த பணி அனுமதியை மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் ரத்துசெய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க... கரோனா நிவாரணத் தொகை வேண்டும் - மின் வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்கள்!